அமித் ஷா வருகை: திமுக-பாஜக கூட்டணியா? சர்ச்சைக்கு ஆதாரமான 6 நிகழ்வுகள்

சில மாதங்களுக்கு முன்பு ‘கோ பேக் அமித் ஷா’ என ட்வீட் போட்ட உடன்பிறப்புகள், இனி ‘வெல்கம் அமித் ஷா’ என கூறப்போகிறார்களா? என கமெண்ட்கள்...

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை வரவிருப்பது சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘கோ பேக் அமித் ஷா’ என ட்வீட் போட்ட உடன்பிறப்புகள், இனி ‘வெல்கம் அமித் ஷா’ என கூறப்போகிறார்களா? என கமெண்ட்கள் பறக்கின்றன.

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஒரு தேசியக் கட்சியின் தலைவர் வருகை தருவது ஏன் அரசியலாகப் பார்க்கப்படுகிறது? இதோ ஒரு அலசல்!

கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் அமித் ஷா: ஆதரவும், எதிர்ப்பும்! To Read, Click Here

1.2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தேசியக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, சென்னையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார் மு.க.ஸ்டாலின். அப்போது பாஜக.வை ஏன் அழைக்கவில்லை என நிருபர்கள் கேட்டபோது, ‘திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் ஒரு கட்சியை எப்படி அழைக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

மு.க.ஸ்டாலினின் அந்தக் கருத்து இப்போது மாற்றப்பட்டுவிட்டதா? என்கிற கேள்வி பிரதானமாக எழுகிறது.

2.துக்க நிகழ்ச்சிகளில் சர்வ கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வது வாடிக்கையானதே! அந்த வகையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பாஜக தலைவர்கள் வந்ததையும், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர்கள் சென்றதையும் யாரும் குறை கூறவில்லை.

ஆனால், ‘தெற்கே உதித்தெழுந்த சூரியன்’ என்கிற தலைப்பில் கருணாநிதியின் புகழ் பாடும் கூட்டத்திற்கு பாஜக தலைவர்களை அழைக்க வேண்டிய கட்டாயம் திமுக.வுக்கு ஏன் ஏற்பட்டது? இந்தக் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்றால், கருணாநிதியின் மதவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பேச வேண்டியிருக்கும். அது அமித் ஷாவுக்கு மட்டுமல்ல… திமுக.வுக்கும் உவப்பாக இருக்காது. ஏன் இந்த நெருடலை திமுக உருவாக்குகிறது?

3.திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதாக கூறும் பட்சத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வராதது ஏன்? மன்மோகன்சிங் போன்றவர்களைக்கூட காங்கிரஸ் அனுப்பவில்லை. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக தனது தேசியத் தலைவரை அனுப்பி வைக்கிறது.

அமித் ஷா அவ்வளவு சுலபத்தில் இன்னொரு கட்சித் தலைவரின் இரங்கல் நிகழ்ச்சிக்கு செல்கிறவர் இல்லை. அதுவும் பாஜக.வுக்கு கொள்கை ரீதியாக நேர் எதிர் நிலையில் இருக்கும் திமுக தலைவரின் புகழ் பாடும் கூட்டத்திற்கு வர சம்மதம் தெரிவித்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. இதுதான் திமுக-பாஜக கூட்டணியா? என்கிற விவாதத்தை வேகப்படுத்தியிருக்கிறது.

சென்னையில் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சி: அமித்ஷாவுடன் பங்கேற்கும் தேசியத் தலைவர்கள் யார், யார்? To Read, Click Here

4.கருணாநிதியின் புகழ் பாடும் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக ஆகஸ்ட் 24-ம் தேதியே அழைப்பிதழை திமுக வெளியிட்டுவிட்டது. ஆனால் அடுத்த நாள் நிருபர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் ஒரே குரலில், ‘அமித் ஷா வர இருப்பது குறித்து தமிழக பாஜக.வுக்கு தகவல் இல்லை. தகவல் கிடைத்தால், தெரிவிக்கிறோம்’ என்றார்கள்.

இதிலிருந்து தமிழக பாஜக தலைவர்கள் வழியாக அமித் ஷா ‘அப்பாய்ன்மென்ட்’ பெறப்படவில்லை என்பது உறுதி ஆகிறது. திமுக எம்.பி.க்களுக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் இல்லாததைப் பார்த்தால், அவர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் புரியலாம். மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரடியாக அமித் ஷாவை அணுகி அழைத்திருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. இது இரு கட்சிகள் இடையில் மேல்மட்டத்தில் பிணைப்பு வலுப்பெற்றுவிட்ட தோற்றத்தை தருகிறது.

5.திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கொள்கை சார்ந்த விஷயங்களில் தடுமாற்றம் இல்லாமல் பேசக்கூடியவர்! அவரது சொந்த மாவட்டமான வேலூரில் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ‘பாஜக எதிர்க்கட்சிதான். ஆனால் எதிரி இல்லை’ என திடீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாஜக.வை தங்களின் கொள்கை எதிரியாகக்கூட அடையாளப்படுத்தாமல் துரைமுருகன் பேசியிருப்பதும் பூடகமாக எதையோ கூற வருவதாக கருதப்படுகிறது. அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தவிருப்பவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் நெருங்குகிறதா திமுக? கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார் To Read, Click Here

6.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை, ‘இன்று கவிழும், நாளை கவிழும்’ என மு.க.ஸ்டாலின் தேதி குறித்து வந்தார். ‘இந்த மேடையை விட்டு நான் இறங்கும் முன்பு கூட ஆட்சி கவிழலாம்’ என சில மேடைகளில் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக்கூட வெற்றிகரமாக எதிர்கொண்டு அதிமுக வென்றது. ஆனால் அண்மைகாலமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு டெல்லியில் சரியான மரியாதை இல்லை. இதற்கு மேல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாஜக.வின் மறைமுக ஆதரவு இருக்காது என்கிற ஒற்றை உடன்பாடு அடிப்படையில் திமுக.வை நோக்கி பாஜக நெருங்குவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்காக 2021 வரை காத்திருக்க விரும்பாத திமுக.வும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தயாராவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்த மூவ் எந்த அளவுக்கு நகரும் என்பதை வரும் நாட்கள்தான் உறுதி செய்யும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close