சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலைக்கு CRZ அனுமதி! பணிகள் துவங்குமா?

அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல், பாறை உள்ளிட்டவற்றை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது

வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 5 மடங்கு மரங்களை நட வேண்டும்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மதுரவாயல் வரை ஏற்கனவே உள்ள சாலை வழியாக வரும் வாகனங்களுக்கு, மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி செல்ல புதிய உயர்மட்ட சாலை அமைக்க அப்போதை திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு சென்னை பறக்கும் சாலை திட்டம் (Chennai Express Way) என்று பெயரிட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கியது. ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருந்த இத்திடத்திற்கு 2007-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டு 2012-ஆம் ஆண்டில் பறக்கும் சாலை திட்டத்திற்காக சில பணிகள் நிறைவடைந்திருந்த வேளையில், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அரசாணை

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்று அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தன் விளைவாக இத்திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவித்தார். 1800 கோடியாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட இத்திட்டம் 2018-ஆம் ஆண்டில் 2,400 கோடியாக உயர்த்தப்பட்டு பின்னர் இந்த ஆண்டு 3087 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

திட்ட விபரங்கள்:

விரிவான திட்ட அறிக்கையின்படி இந்த சாலையானது 19 கிலோ மீட்டரிலிருந்து 20.5 கிலோ மீட்டராக மாற்றப்பட்டது. முன்னர் சாலையில் 3 இடங்களில் உள் நுழையவும் 3 இடங்களில் வெளியேறவும் வழி திட்டமிடப்பட்ட நிலையில் துறைமுகத்திற்கு உள்ளேயும் மதுரவாயலில் சாலை முடியும் இடத்தில் மட்டுமே வாகனங்கள் ஏறவும் இறங்கவும் வழி என மாற்றியமைக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தின் மதுரவாயலில் முடிவடைகிறது. இந்த சாலைக்காக 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட சாலை அமையவுள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகின்ற 10 கிலோமீட்டர் தூரமும் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் CRZ அனுமதி அவசியமாகும். 2011-ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு CRZ அனுமதி பெறப்பட்டிருந்தாலும் சில திருத்தங்கள் செய்யப்பட்ட காரணத்தால் மீண்டும் CRZ அனுமதிகோரி சென்னை துறைமுக நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை கடந்த ஜூலை 30ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலித்தது.

கட்சியை கலைக்க தயங்க மாட்டேன்: நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை

நிபந்தனைகளுடன் அனுமதி:

விரிவான ஆலோசனைக்குப் பின்னர் 6 நிபந்தனைககுடன் இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்க முடிவெடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

1) வழங்கப்படும் CRZ அனுமதியானது தேசிய வனவுயிர் வாரியத்தின் அனுமதிக்கு கட்டுப்பட்டது.

2) வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 5 மடங்கு மரங்களை நட வேண்டும்.

3) கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்சு பயன்படுத்தக் கூடாது.

4) அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல், பாறை உள்ளிட்டவற்றை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது.

5) கட்டுமானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகளை திட்டம் முடிவடைந்த பின்னர் அகற்ற வேண்டும்.

6) நீடித்த சுற்றுச்சூழல் மேலாண்மையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசின் கட்டுமான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்கிற நிபந்தனைகளோடு நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

CRZ அனுமதி கிடைத்திருப்பதால் விரைவில் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai harbour to maduravoyal elevated expressway projects works crz clears permission

Next Story
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அரசாணைKerala government imposes section 144 of crpc till october 31 to contain covid19 spread,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com