2018-19ம் நிதியாண்டில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், ரூ.715 கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு ஆபாந்தபாந்தவனாக சென்னை மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ.), சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்), மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவது வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த வருட மத்தியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Chennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..
தாம்பரம்வாசிகளே விரைவில் வேளச்சேரிக்கு பறக்கலாம் – வருகிறது புதிய அறிவிப்பு
பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களின் மெட்ரோ ரயில் சேவைகளை ஒப்பிடும்போது, சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நஷ்டம் தான் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் கடந்த 2018-19-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாகம், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் ரூ.715 கோடி நஷ்டத்தை கண்டுள்ளது. மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் தான் இழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோவில் நிகர இழப்பு என்பது செயல்பாட்டில் இருக்கும் வழித்தடம் மற்றும் செயல்படாத வழித்தடம் என இரண்டையும் உள்ளடக்கியது. 2018-19ம் ஆண்டிற்கான சென்னை மெட்ரோவின் ஆண்டறிக்கையில் செயல்பாட்டில் இருக்கும் வழித்தடங்களில் மட்டும் ரூ.422 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.61.9 கோடியும், ‘பார்க்கிங்’ கட்டணம் மற்றும் பிற வருமானங்களில் இருந்து ரூ.24 கோடியும், வட்டி மற்றும் அரசு மானியங்களில் இருந்து ரூ.97 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
வருடாந்திர அறிக்கையின்படி, செயல்படும் வழித்தடங்களில் டிக்கெட் விற்பனை, ‘பார்க்கிங்’ கட்டணம் மூலம் வருமானம் முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இயக்க செலவுகள், தேய்மானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற செலவுகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் வருவாயை அதிகரிக்க, ரயில் நிலையங்களை எளிதில் அணுகும்படியாக பிற போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பது, நடைபாதை வசதிகள் அமைப்பது, ஏழை, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணம் கொண்டு வருவது, விளம்பரம் போன்ற பிற வருவாய்களில் கவனம் செலுத்துதல் பயனுள்ளதாக அமையும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“