Corona Updates in Tamil Nadu: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கடந்த 4-5 தினங்களாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்படி, கடந்த 14-ம் தேதி 31 பேரும், 15-ம் தேதி 38 பேரும், 16-ம் தேதி 25 பேரும், 17-ம் தேதி 56 பேரும், 18-ம் தேதி 49 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று (ஏப்.18) வரை தமிழகத்தில் 1,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே தமிழகத்தில் இன்னும் 2-3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலைக்குச் சென்றுவிடும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரு தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்.19) வழக்கமாக, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து மேற்கொள்ளப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்படவில்லை. மாறாக, தமிழக சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் வழக்கமான செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
''தமிழகத்தில் இன்று ( ஏப்ரல். 19) ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 381. 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்கள் 85 ஆயிரத்து 253 பேர். அரசு கண்காணிப்பு முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 20 பேர்.
இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 876. பரிசோதனை செய்யப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 741. நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 46. மொத்தமாக இதுவரை 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று இறப்பு ஏதும் இல்லை. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 15" என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”