சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பணம் செலுத்தி மது வாங்குபவர்களுக்கு 750 மி.லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டில் ஒருவருக்கு வழங்க வேண்டும். மின்னணு முறையில் பணம் செலுத்துவர்களுக்கு 2 முழு பாட்டில் என, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும். அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் வயது வாரியாக விற்பனை செய்யபடும், மொத்த விற்பனையை அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதித்து கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊரடங்கு காலத்தில் ஆன் - லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை மேற்கொள்ள வேண்டும் திறக்கப்பட்ட அனைத்து மதுகடையையும் மூட வேண்டும் என கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ( Registrar Judicial) எம்.ஜோதிராமன் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் நிலுவையில் உள்ள டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடத்தபடவுள்ளது. அந்த அமர்வில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என். பிரகாஷ் இடபெறுவர்கள் எனவும் அனைத்து வழக்குகளை வரும் 14 ஆம் தேதி காலை, 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”