கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது. தொண்டர்கள் வெள்ளமாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியின் தொகுப்பு இது!
திமுக தலைவர் கருணாநிதி, 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜூலை 28 முதல் சிகிச்சை பெற்ற அவர், ஆகஸ்ட் 7 அன்று (நேற்று) மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவரது உடல் இரவு 9 மணி முதல் 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும், பிறகு சில மணி நேரம் சி.ஐ.டி. காலனி இல்லத்திலும் வைக்கப்பட்டது. இரு இடங்களிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று அதிகாலை சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு To Read, Click Here
ராஜாஜி ஹாலில் நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு தலைவர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். கருணாநிதியின் உடல் அடக்கம் எங்கு நடைபெறும் என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே இருக்கிறது.
DMK Chief Kalaignar Karunanidhi Funeral: கருணாநிதிக்கு அஞ்சலி
3:50 PM: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
3:30 PM: கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான அவகாசம் முடிந்தது. கருணாநிதியின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு அடக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
3:10 PM : காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர், அடித்தட்டு மக்களுக்காக போராடியவர், சமூக நீதிக்காக பாடுபட்டவர் என குலாம்நபி ஆசாத் புகழாரம் சூட்டினார்.
#KarunanidhiDeath | "உங்கள் கால்களை தொட்டு மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்" - தொண்டர்களிடம் ஸ்டாலின் உருக்கமான பேச்சு |#Stalin pic.twitter.com/uf9Yaw7CjK
— Thanthi TV (@ThanthiTV) 8 August 2018
3:00 PM: கருணாநிதி உடலைக் கொண்டு செல்ல ராணுவ வாகனம், ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது.
2:45 PM: கருணாநிதிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுனர் சதாசிவம் ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
2:20 PM : கருணாநிதியின் உடல் வைக்கப்பட இருக்கும் பேழையின் மீது கருணாநிதி முன்பே கூறியபடி, ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என பொறிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து அஞ்சலி செலுத்த வந்த உடன்பிறப்புகள் எமோஷனலாக காணப்பட்டார்கள்.
2:15 PM: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வந்தார்.
1:50 PM: கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலில் மதியத்திற்கு பிறகு தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. கூட்ட நெரிசலில் 2 பெண் போலீஸார் உள்பட 26 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் மைக்கில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான இடத்தின் உரிமையை சட்டப் போராட்டம் மூலமாக பெற்றிருக்கிறோம். உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாக செல்லும்படியும், கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படும்படியும் கேட்டுக்கொண்டார்.
1:30 PM : கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அறிக்கை விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியது குறித்து தமிழில் ட்வீட் செய்தார். மோடி தனது ட்வீட்டில், ‘தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்.' என கூறியிருக்கிறார்.
1:15 PM: மாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட இருக்கிறது. சிவானந்தா சாலை வழியாக பெரியார் சிலை, அண்ணா சிலை பகுதிகளை கடந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை ஊர்வலம் வந்து சேரும். அங்கு மெரினாவில் அண்ணா சதுக்கம் வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் நடைபெறும்.
மேற்கண்ட தகவல்களை ஒரு அறிக்கையில் தெரிவித்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், ‘தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்த தொண்டர்கள் கட்டுப்பாடு காத்து வரவேண்டும்’ என குறிப்பிட்டார்.
12:30 PM: விஐபி.க்கள் செல்லும் வாசல் வழியாக திரளான தொண்டர்கள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு ராஜாஜி ஹாலுக்கு அஞ்சலி செலுத்த வரும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இனி வன்முறைக்கு வாய்ப்பில்லை என தெரிந்து கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அஞ்சலி செலுத்த வருவதே இதற்கு காரணம்!
#Watch: Scuffle between breaks out between Police & crowd gathered at #RajajiHall, police resort to lathi charge. #Karunandhi pic.twitter.com/jBjKdfrNzK
— ANI (@ANI) 8 August 2018
12:00 PM : கருணாநிதி உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் பார்வையிட்டனர்.
11:15 AM : பிரதமர் நரேந்திர மோடி, ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்பு அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.
அஞ்சலி செலுத்தியபிறகு மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோருக்கு மோடி ஆறுதல் கூறினார்.
10:45 AM; மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்க நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்தத் தகவல் தெரியவந்ததும் ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தபடி கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டனர். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் கண் கலங்கினர்.
10:35 AM : சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக சென்னை, நேப்பியர் பாலம் அருகேயுள்ள கடற்படை தளத்திற்கு மோடி வருகிறார். அங்கிருந்து சொற்ப தொலைவில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு காரில் வர இருக்கிறார்.
10:25 AM : கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து சேர்ந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவர் ராஜாஜி ஹாலுக்கு வந்து சேரக்கூடும்.
10:25 AM: நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்திவிட்டு, ‘அவரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அவர்! தமிழே நம்மை விட்டுப் போனதுபோல இருக்கிறது’ என்றார் வடிவேலு.
10:15 AM: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, இரங்கல் தெரிவித்து நிருபர்களிடம் பேசினார்.
10:10 AM: மெரினாவில் அண்ணா நினைவிடம் பகுதியில் திடீரென மத்திய துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதி உடல் அடக்கம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அங்கு பாதுகாப்புப் படை குவிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
10:05 AM : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருப்புச் சட்டையுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்கள் வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
10:00 AM : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
9:50 AM: முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையாருக்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனுமதி மறுத்ததை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘முதல்வருக்கு அனுமதிப்பதிலும், முன்னாள் முதல்வருக்கு அனுமதி கொடுப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது’ என நீதிபதி சுந்தர் குறிப்பிட்டார்.
9:35 AM: மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசு விதிகள் எதுவும் எதிராக இல்லை, மாநில அரசே இதில் முடிவு எடுக்கலாம் என்றும் வில்சன் வாதிட்டார்.
9:10 AM: மெரினாவில் இடம் ஒதுக்க கேட்ட வழக்கில் திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டு வருகிறார். அவர், ‘ஒரே சித்தாந்தம் உடையவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதுதான் சரியானதாக இருக்கும். ‘கருணாநிதியே எனது ஆன்மா, வாழ்க்கை’ என அண்ணா கூறியிருக்கிறார். கிண்டியில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் சித்தாந்தம் வேறு’ என வில்சன் வாதிட்டார்.
8:40 AM: மெரினாவில் இடம் ஒதுக்கும் பிரச்னையில் திமுக மனு, மற்றும் வாதம், அரசுத் தரப்பு பதில் மனு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கிறார்கள் நீதிபதிகள். ‘இன்றே தீர்ப்பு வழங்க வேண்டுமா?’ என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என அரசுத் தரப்பில் பதில் கூறினர்.
8:25 AM: கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் விவேக், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் வந்தனர்.
8:20 AM : கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் கடற்கரையோர சட்ட விதிகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மதியத்திற்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வழக்குகளை காரணம் காட்டி தலைமை செயலாளர் அறிக்கை விட்டதால், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டிருப்பதை திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
8:15 AM: தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். குஷ்பூ, திமுக முதன்மை செயலாளர் துரை முருகனிடம் கண்ணீர் மல்க சில வார்த்தைகள் பேசினார். துரைமுருகன் தனது பேரன், பேத்திகளுடன் வந்தார்.
தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு! To Read, Click Here
8:00 AM: நடிகர் பிரபு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர். வைரமுத்து கருணாநிதி உடல் வைக்கப்பட்ட பெட்டியை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
7.30 AM : பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான இல.கணேசன் அஞ்சலி.
7.23 AM : நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
7:00 AM: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் அமைச்சரவை சகாக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம், கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் முதல்வர் பதில் அளிக்காமல் பேட்டியை முடித்தார்.
6:00 AM: கருணாநிதி மரணம் அடையும் முன்பாகவே அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி கவுரவம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
ஒரே ஒரு முறை ‘அப்பா’ என அழைத்து கொள்ளவா தலைவரே : ஸ்டாலின் உருக்கம் To Read, Click Here
அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு மரியாதை: ரஜினிகாந்த் கருத்து To Read, Click Here
கருணாநிதி மரணத்திற்கு பிறகு, ராகுல் காந்தியில் ஆரம்பித்து பல்வேறு தேசிய, மாநில தலைவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டு, அரசுத் தரப்பு பதிலுக்காக இன்று (ஆகஸ்ட் 8) காலை 8.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.