தி.மு.க தலைவர்கள் குவித்துள்ள பெரும் சொத்துக்களைப் பற்றி மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்) கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் தமிழக விசில்ப்ளோயர் ஒருவர் வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஆடியோ கிளிப் "தவறானது மற்றும் இட்டுக்கட்டப்பட்டது" என்று பி.டி.ஆர் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் பி.டி.ஆர் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டு, தமிழக பா.ஜ.க தலைமை ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தி.மு.க முக்கிய தலைவர்கள் "தவறாக சம்பாதித்த பணத்தை அம்பலப்படுத்தியதாக" கூறப்படும் ஆடியோ கிளிப்பை தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.
இதையும் படியுங்கள்: ரூ.30,000 கோடி ஊழல்; பி.டி.ஆர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் பேட்டி
"நான் என்னவாக இருந்தாலும், பொது வாழ்க்கையில் நான் என்ன செய்தாலும்" தனது வாழ்க்கையில் ஒரு தலைவராக செயல்படுவது முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினே என்று பி.டி.ஆர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்களைப் பிரிக்கும் எந்த ஒரு ”தீங்கிழைக்கும்” முயற்சியும் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார். "பொதுவில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு அது உண்மையானது அல்ல என்று தெளிவாகக் காட்டுகிறது" என்று அவர் கூறினார். மேலும், சங்பரிவாருக்கு எதிரான தாக்குதலில் தி.மு.க.,வையும் அவரையும் அவதூறு செய்ய, தனது பெயரில் உள்ள ஆடியோ கிளிப் “பல கிளிப்புகள் வெட்டி ஒட்டுவதன் மூலம் கையாளப்பட்ட தெளிவான செயல்முறை” என்று கூறி, ஆடியோ தடயவியல் பகுப்பாய்வின் ஸ்கிரீன் ஷாட்களையும் பி.டி.ஆர் வெளியிட்டுள்ளார்.
"எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட மற்றும்/அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட கிளிப்களை உருவாக்கும் திறனுடன், வரும் நாட்களில் மற்றும் மாதங்களில் அதிக தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் வெளியாகும் அதிகமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனது ட்விட்டர் பக்கமான @ptrmadurai இல் பிரபல திரைப்படமான ‘தி கிரேட் எஸ்கேப்’ படத்தின் உதாரணத்தை ஏற்கனவே ரீ-ட்வீட் செய்துள்ளேன்” என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் கூறினார். மேலும், "பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துபவர்களாகச் செயல்பட வேண்டிய பாரம்பரிய ஊடகங்கள், முதல்நிலைத் தகவல் அல்லது குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட இரண்டாவது நிலைத் தகவல்களைக் கொண்டு மட்டுமே குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் பி.டி.ஆர் கூறினார்.
வழக்கு விசாரணைக்கு பல மாதங்கள் ஆகும் என்றும், அத்தகைய நடவடிக்கை "அப்பட்டமான பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு" மேலும் விளம்பரம் அளிக்கும் என்றாலும், அவதூறு அதிகபட்ச சகிப்புத்தன்மையின் வாசலைத் தாண்டினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் பி.டி.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் முழுமையாக ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்த கிளிப் வெளியிடப்பட்டுள்ளது என்றும் பி.டி.ஆர் கூறினார். ”4,13,639 கோடி ரூபாய்க்கான முக்கிய நிதி ஒதுக்கீட்டு மசோதா, 55 துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, ஏப்ரல் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 22ஆம் தேதி சனிக்கிழமை, பட்ஜெட் காரணமாக தேக்கிவைக்கப்பட்ட அனைத்து கோப்புகளையும் செயலாக்கினேன், இன்றுவரை எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை, ”என்று பி.டி.ஆர் கூறினார்.
தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை, பி.டி.ஆரின் அறிக்கையை, “இரண்டு நாட்களாக தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் சமூக ஊடகங்களில் அரைகுறையாகப் பாதுகாத்துத் தொகுத்தளித்த வடிவம்” என்று குறிப்பிட்டார். மேலும், “தி.மு.க ஐ.டி பிரிவின் முட்டாள்கள் செய்த போலி ஆடியோ பகுப்பாய்வை நம்பி, ஒரு மாநில நிதியமைச்சர் தனது தற்காப்புக்காக அதைப் பயன்படுத்துகிறார், இது இந்த விஷயத்தில் அவருடைய பாதுகாப்பின்மையை மட்டுமே காட்டுகிறது… இந்த தற்காப்பு நடவடிக்கையை யாரும் நம்ப மாட்டார்கள். ஆடியோவின் ‘சுயாதீனமான தடயவியல் பகுப்பாய்வு’ வேண்டும் என்று கோரிக்கை வைக்க மாநில நிதியமைச்சரை தடுப்பது எது? ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி - திரு @mkstalin (மு.க.ஸ்டாலின்) மக்களுக்கு விளக்குவதற்கு நிறைய இருக்கிறது, ”என்றும் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
ஸ்டாலினின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ரூ.30,000 கோடி குவித்துள்ளதாக பி.டி.ஆர் கூறியதாக 26 வினாடிகள் கொண்ட ஆடியோ கிளிப்பை சப்டைட்டில்களுடன் வெள்ளிக்கிழமை அண்ணாமலை ட்வீட் செய்திருந்தார்.
சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப்பை சுதந்திரமாக தடயவியல் தணிக்கை செய்யக் கோரி கட்சி பிரதிநிதிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளனர் என்று அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அண்ணாமலையின் குரலில் ஒரே மாதிரியான உள்ளடக்கம் கொண்ட ஆடியோ கிளிப்பை தைரியமான பி.டி.ஆர் தயாரிக்கலாம் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, “நாம் இரண்டு ஆடியோ மாதிரிகளையும் நீதிமன்ற கண்காணிப்பு விசாரணைக்கு சமர்ப்பிப்போம், மேலும் இரண்டு ஆடியோ கிளிப்களின் உண்மை தன்மையை விசாரணை நிறுவனத்தைக் கண்டறிய அனுமதிப்போம். எனது குரல் மாதிரிகளை சமர்ப்பிப்பேன், மாநில நிதி அமைச்சரும் அதைச் செய்வார் என எதிர்பார்க்கிறோம். எனவே, இது மிகவும் பெரிய வழக்கு என்பதை மாநில நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.
தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, பெயர் வெளியிட விரும்பாத நிலையில், சர்ச்சை இன்னும் ஒரு வாரத்தில் அழிந்துவிடும் என்று கூறினார், மேலும், “அவர் (பி.டி.ஆர்) எங்கள் சிறந்த அமைச்சர்களில் ஒருவர். அவர் குறிவைக்கப்படுவது இயற்கையானது,'' என்றும் அவர் கூறினார். பா.ஜ.க.,வின் தடயவியல் தணிக்கை கோரிக்கை குறித்து கேட்டபோது, எப்.ஐ.ஆர் இருந்தால் மட்டுமே தடயவியல் தணிக்கை செய்ய முடியும் என்று கூறினார். மேலும், “ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், ஆளும் கட்சியைத் தாக்கும் போட்டியாளர்களுக்கு முன் ஒரு நபர் (பி.டி.ஆர்) பெரும்பாலும் மென்மையான இலக்காக இருப்பதே ஆகும். அவரது இயல்புக்கு, பி.டி.ஆர் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருப்பார். அவர் அதைச் செய்யவில்லை, ”என்றும் அவர் கூறினார். மேலும், குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதன் மூலம் பி.டி.ஆர் சர்ச்சைகளை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.