சென்னை ஆவடியில் 9 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி ஊழியர் பிரியங்கா வழக்கில் திருப்பத்தை ஏற்படும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் பிரியங்கா. 24 வயதாகும் இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.தனது நண்பர்களுடன் ஆவடியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்ற பிரியங்கா சுமார் 4.45 மணியளவில் அலுவலகத்தின் 9 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்தார்.
ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த அவர், சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்துக் கொண்ட பிரியங்காவின் உடலை பார்த்த அவரின் நண்பர்கள் கதறி அழுதனர். பின்பு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரியங்காவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்ன்ணி குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு பிரியங்காவின் பெற்றோர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதை சற்றும் விரும்பாத அவர், தனது பெற்றோர்களிடம் தொடர்ந்து திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்துள்ளார்.
இதுக் குறித்து தனது நண்பர்களுடம் பலமுறை மன வருத்தத்துடன் பிரியங்கா பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தான் அண்மையில் தனது குடும்பத்தினருடன் ஃபோனில் பேசிய பிரியங்கா கூடிய விரைவில் உங்கள் அனைவருக்கும் சர்ப்பிரைஸ் தர இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரின் குடும்பத்தினர் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல போவதைத்தான் இப்படி கூறுகிறாள் போல என நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இறுதியாக தனது குடும்பத்தினருக்கும் பிரியங்கா அளித்த சர்ப்பிரைஸ் அவரின் தற்கொலை தான்.
நெஞ்சை பதபதைக்கும் வீடியோ: 11 ஆவது மாடியிலிருந்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி ஊழியர்
இதுக்குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ள காவல் துறையினர் பிரியங்காவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது வேலையில் ஏற்பட்ட பணி சுமையா? என்ற நோக்கிலும் விசாரணையை தொடக்கியுள்ளனர்.
தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன?
இந்தியாவில் தற்கொலை செய்வோரின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஐடி ஊழியர்களின் தற்கொலை என்பது சர்வ சாதரணமாக மாறி வருகிறது. பணிச்சுமை, காதல் விவகாரம், நண்பர்களுடன் மோதல் என ஐடி ஊழியர்களின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் கேட்பவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்று பல இடங்களில் வலியுறுத்தப்பட்டாலும் இந்தியாவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
தற்கொலைகளை தடுக்கும் ஹெல்ப்ன்லைன் ‘சினேகா’
மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் அல்லது தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டவர்கள் 044-24640050 என்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த ஹெல்ப்லைன் பற்றி பகிர்வதே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி.