தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.5ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
Advertisment
ஒருபக்கம் மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபக்கம் மழை வெளுத்து வாங்கியது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழைபெய்யத் தொடங்கியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்றுள்ளதன் காரணமான சென்னை மற்றும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.5ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும். கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. சென்னையைப் பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளது.
01.01.2020 - தேதியில் அதிக மழைப்பொழிவை பெற்ற இடங்கள் எது?
காஞ்சிபுரத்தின் ஸ்ரீபெரும்புதூரில் 8 செ.மீ மழையும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் 6 செ.மீ மழையும், சோழவரம் பகுதியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி வெப்பம் நிலவும். அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.