ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட ஊராட்சிகளை பொறுத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா 13 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளநிலையில் களம் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 240; தி.மு.க. கூட்டணி 271 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 2199; தி.மு.க. கூட்டணி 2356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக எங்கே வென்றது? எங்கே சறுக்கியது?
அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலத்தில் நூலிழையில் மீண்ட பின்னணி
வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை ( ஜனவரி 6ம் தேதி) பதவியேற்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக ஜனவரி11ம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. - தி.மு.க. தலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அ.ம.மு.க.வுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது. மீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இதுபோன்று ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன. சுயேச்சை வேட்பாளர்களை இழுக்க பேரமும் நடக்கிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கவுன்சிலர்கள் முகாம் மாறி விடக்கூடாது என்பதற்காக அவர்களை கவனிக்கும் பணியையும் துவக்கி உள்ளனர். இது சுயேச்சை மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.