Local body election results : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று (02/01/2020) காலை துவங்கி இன்று (03/01/2020) வரை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் 27 மாவட்டங்களில் இந்த தேர்தல்கள் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கூட ஒரே நாளில் வெளியிடப்பட்டுவிடும் நிலையில் ஏன் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது தான். ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் எதுவும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு நடத்தப்படவில்லை. மாறாக, வாக்குத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் என நான்கு பதவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. வாக்காளர்கள் அனைவருக்கும், இந்த பதவிகளுக்கான தலைவர்களை தேர்வு செய்ய நான்கு வாக்குச்சீட்டுகள் அளிக்கப்பட்டது.
அனைத்திலும் வாக்காளர்கள் ஒரே நேரத்தில் தங்களின் வாக்குகளை பதிவு செய்து ஒரே ஓட்டுப் பெட்டியில் இட்டனர். இவ்வாறாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். 27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 30ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. ஓட்டுப்பெட்டி, தேர்தல் முடிவுற்றவுடனே சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. அது மீண்டும் 2ம் தேதி காலையில் தான் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பெட்டியில் இருந்தும் முதலில் வாக்குகள், பதவி வாரியாக தனித்தனியாக முதலில் பிரிக்கப்படும்.
பின்னர் அவற்றின் எண்ணிக்கை ஆரம்பிக்கும். வாக்குகள் எண்ணிக்கை என்பது வார்டு வாரியாகவே நடைபெறுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். வார்டுக்கு வார்டு வாக்காளர்களின் எண்ணிக்கையும் மாறும். ஒரு ஒன்றியத்தில் இருக்கும் கடைசி வார்டின் தேர்தல் முடிவுகள் வெளியாக கால தாமதம் ஆவதன் காரணம் இது தான்.
இரண்டாவதாக, இது உள்ளூர் சார்ந்த, சொந்த மக்கள், சொந்த உறவுகள் சார்ந்த ஒரு தேர்தலாகவும் கூட பார்க்கப்படுகிறது. எதிர் வீட்டில் இருப்பவரும், பக்கத்து வீட்டில் இருப்பவரும் கூட தேர்தலில் களம் காணும் போது அங்கே மிகவும் பதட்டமான சூழல் நிலவுவதும், முடிவுகள் வெளியாவதில் தாமதம் என்பது அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளும் கூட காரணமாக அமைகிறது. செல்லாத வாக்குகள் : சில நேரங்களில் வாக்குகள் பதிவானது போன்று இருக்கும், சில நேரங்களில் எந்த சின்னத்திற்கு வாக்களித்துள்ளார் என்பது போன்ற குழப்பங்கள் நிலவும். இதன் காரணமாகவும் வாக்குகள் எண்ணிக்கையும், அறிவிப்பும் தாமதம் ஆகிறது.
சில இடங்களில் வேட்பாளர்கள் போராட்டம், ஆர்பாட்டம், நேரத்திற்கு உணவு வரவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் வெளிநடப்பு, வருகையில் தாமதம், வேலையில் இருப்பவர்கள் மாரடைப்பில் மரணம் போன்ற காரணங்களாலும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர தாமதம் ஆனது.