muralidhar rao meet cm palanisamy tn ministers meet amit shah
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக மூத்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்திய அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Advertisment
கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில், இன்று இரவு சுமார் 1 மணி நேரம் முரளிதர் ராவுடன் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர் ராவ், "குடியுரிமை சட்டத் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் முயற்சிகளை பற்றி பேசினேன். தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்" என்றார்.
மேலும், "தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்ததற்கு, மத்திய அரசுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் இத்தனை மருத்துவக் கல்லூரிகளை யாரும் ஏற்படுத்தியதில்லை என்று பாராட்டு தெரிவித்தேன்" என்றார்.
டெல்லியில் அமித் ஷாவுடன், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் அதுசார்ந்த போராட்டங்கள் தொடர்பாக அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமாரும், தங்கமணியும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையிலும் முதல்வருடன் பாஜகவின், முக்கியமான தலைவர்களில் ஒருவரான முரளிதர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவரும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.
என்னதான் குடியுரிமை சட்டதிருத்தம், போராட்டம், மருத்துவக் கல்லூரி என்று சந்திப்பிற்கான காரணங்கள் சொல்லப்பட்டாலும், மாநிலங்களவை எம்.பி. சீட் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை தான் இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் ஒதுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல்வர் பழனிசாமியோ, "அதிமுகவில் மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்” என்று முன்பே கட்சியின் நிலையை தெளிவுப்படுத்திவிட்டார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கும் முடிவு அதிமுக தலைமைக்கு இல்லை என்றே கருதப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் தான், பாஜக - அதிமுக இடையே இரு வெவ்வேறு சந்திப்புகள் இரு வெவ்வேறு இடங்களில் இன்று நடைபெற்றிருக்கிறது. சுதீஷ், பிரேமலதா ஆகியோருக்கு நெருக்கமான நண்பராக அறியப்படும் முரளிதரராவ், ஏன் தேமுதிகவுக்காக தூது போயிருக்கக் கூடாது? என்கின்றனர் விவரம் அறிந்த சிலர்.