O Panneerselvam accepts the meeting with TTV Dhinakaran: ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக ‘தர்மயுத்தம்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டிருக்கிறார். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் உடன் இருந்ததாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்.
Read More: ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் பஞ்சாயத்து! டாப் 10 அப்டேட்ஸ்
அதாவது, ஆகஸ்ட் மாதம் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் ஆக்க துணை புரியும்படி கேட்டதாக டிடிவி தரப்பு கூறுகிறது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகார் தொடர்பாக இன்று (அக்டோபர் 5) இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
O Panneerselvam interview: ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் பேட்டி
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த சந்திப்புக்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் செய்தியாளர்கள் குவிந்தார்கள். ஓபிஎஸ் அளித்த பேட்டி வருமாறு:
‘நேற்றிலிருந்து தினகரன் ஒரு புதுப் பிரச்னையை குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் முதலில் தங்க தமிழ்செல்வனை பேச வைத்து, இன்று அவரும் பேசியிருக்கிறார். நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பெரிய எழுச்சி இருந்தது.
அதிமுக தொண்டர்கள் சிந்தாமல் சிதறாமல் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு ஒரு குழப்பமான மனநிலைக்கு வந்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவை அழைத்துக்கொண்டு ஒரு சமுதாய நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசியதை நானே சொல்லிவிடுகிறேன்.
Read More: ஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!
கதிர்காமுவை 50 லட்சம் ரூபாய் தருவதாக நான் அழைத்ததாகவும், அவர் வரவில்லை என்றும் உண்மைக்கு புறம்பாக கூறியிருக்கிறார். கதிர்காமு யாரால் எம்.எல்.ஏ. ஆனார் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும்.
தினகரன் பேசிய இந்தப் பொய் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்த சூழலில், மத்திய அரசுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி அரசை நான் கலைக்க முயற்சித்தேன் என சேற்றை வாரி இறைக்கிறார். தினகரனுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். எந்த இயக்கத்தில் இருக்கிறேனோ, அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக கடைசி வரை இருப்பேன்.
எனக்கு உண்மையிலேயே ஆசை இருந்திருந்தால், அம்மா இறந்து 3 மாதங்கள் முதல் அமைச்சராக இருந்தேன். அப்போது சசிகலா முதல்வராக வர இருக்கிறார் என என்னிடம் பலரும் சொன்னபோது, அது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கூறினேன். நான் நினைத்தால் அன்றே முதல்வராகியிருக்க முடியும். அந்த மாதிரி துரோகத்தை பன்னீர்செல்வம் ஒருபோதும் செய்ய மாட்டான்.
தான் நினைத்த காரியம் நிறைவேறாத மனச்சுமையோடு தினகரன் அலைந்து கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து தினகரன் ஜெயித்துவிட்டார். திருப்பரங்குன்றத்தில் அது நடக்காது என நாங்கள் பேசியதைக் கேட்டு ஆத்திரத்தில் டிடிவி தினகரன் பேசுகிறார்.
அந்தக் குடும்பத்திற்கு கட்சியும் ஆட்சியும் போகக்கூடாது என நான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தினகரனுக்கும் பல்வேறு அமைச்சர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அவரது இல்லத்தில் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில் பல அமைச்சர்கள் கோபப்ப்ட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.
அன்றில் இருந்து இந்த ஆட்சியை கவிழ்ப்பேன் என கூறிக்கொண்டிருக்கிறார். ஒருநாள் அவரது வீட்டுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக அழைத்து எண்ணிக்கை காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு இது கட்சிக்கு நல்லது இல்லையே என்கிற கவலை வந்தது.
இந்த ஆட்சியை அவர் கலைப்பேன் என்று தொடர்ந்து கூறியதால், அணிகள் இணைப்புக்கு முன்பு பொதுவான நண்பர் இல்லத்தில் சந்தித்தோம். அவர் ஆட்சியை கவிழ்க்காமல் இருக்க சம்மதிப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் முதல்வர் பதவியை பிடிப்பது பற்றியே பேசினார். அதனால் அவர் திருந்த வாய்ப்பில்லை என முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டோம்.
அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர், ‘என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்’ என தொடர்ந்து கூறியதால் சந்தித்தேன். அரசியல் நாகரிகம் கருதி இதை என்னுடன் இருந்தவர்களுடன்கூட சொல்லவில்லை. அவரை சந்திக்க ஏற்பாடு செய்தவர் இன்று காலை என்னை சந்தித்து, ‘அண்ணே மன்னிச்சுடுங்க. இவ்வளவு கீழ்த்தரமாக அரசியல் செய்வார் என நினைக்கவில்லை’ என கூறிவிட்டுப் போயிருக்கிறார்.
எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்க அந்தக் கொடியவர்களின் கூடாரம் இந்த சதி வலையை பின்னியிருக்கிறது. நான் இந்த அரசில் துணை முதல்வர். நான் எதற்கு இந்த அரசை கவிழ்க்க வேண்டும். ஒரு அரசை கலைத்துவிட்டு முதல்வராக வேண்டும் என்கிற ஈனத்தனமான ஆசை எனக்கு இல்லை.’ இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.