OPS brother attended TTV Dhinakaran's family function : ஆட்சி மாற்றம் துவங்கியதில் இருந்து அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள், அரசியல் நகர்வுகள், கருத்து வேறுபாடுகள் தினசரி நிகழ்வாகிவிட்டது. சில வெளிப்படையானவை. சில விவகாரங்கள் அரசியல் வட்டாரங்களின் பார்வைக்குள் வந்து அங்கே மறைந்துவிடுபவையாகவும் இருக்கிறது. ஆனால் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அதிமுகவில் மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.
கடந்த வாரம், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது ஜனநாயக நாடு. அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். வரும் நபர்களை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் மக்களின் கையில் தான் இருக்கிறது என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் நிதானமாக, துணிந்து பேசியிருக்கிறார்: டிடிவி தினகரன் பாராட்டு
எந்த ஒரு காலத்திலும் இனி சசிகலா அதிமுகவில் இணைய முடியாது என்று கட்சி மேலிடம் பலமுறை தெளிவுப்படுத்திய நிலையில் ஓ.பி.எஸ் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போன வார நிகழ்வு என்றால் இந்த வாரம், சசிகலா அதிமுகவிற்கு வருவாரா இல்லை ஓ.பி.எஸ் அமமுகவிற்கு செல்வாரா என்ற சந்தேகம் வரும்படியாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் டி.டி.வி. தினகரன் - கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ஓ. ராஜா பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் வி.கே. சசிகலாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காலம் என்பதால் மிகவும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ. ராஜா, மணமக்களை வாழ்த்திய பிறகு டிடிவி தினகரனிடம் தனியாக பேசியுள்ளார். இந்த நிகழ்வு அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்ன அவர்கள் பேசியது என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
அதிமுகவில் சசிகலா மீண்டும் இணையும் ஒப்பந்தம் எப்படி இருக்கும்?
அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சசிகலா தன்னைக் கூறிக் கொள்வதும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதும், கட்சியை இணைக்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதும் ஒருபக்கம் இருக்க, ஓ.பி.எஸ்ஸின் சமீபத்திய கருத்துகளும், அவர் குடும்பத்தினரின் சமீபத்திய செயல்பாடுகளும், இரட்டைத் தலைமையின் கீழ் கழகம் வருங்காலத்தில் சிறப்பாக செயல்படுவது குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil