scorecardresearch

ப.சிதம்பரம் விவகாரம்: ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என மு.க.ஸ்டாலின் கருத்து

P Chidambaram News: பிரேமலதா விஜயகாந்த், ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும்’ என காட்டமாக ப.சிதம்பரத்தை சாடியிருக்கிறார்.

chidambaram news, chidambaram latest news, inx media, ப.சிதம்பரம், சிதம்பரம் ஜாமீன்
chidambaram news, chidambaram latest news, inx media, ப.சிதம்பரம், சிதம்பரம் ஜாமீன்

P Chidambaram News On INX Media Case: ப.சிதம்பரத்திற்கு எதிராக பரபர நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மவுனம் காக்கின்றன. சிறு பிரச்னைகளில் கூட பாஜக.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் அமைதி காப்பதால், காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகலில் கருத்து கூறினார்.

ப.சிதம்பரம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை, நிதித்துறை பொறுப்புகளில் இருந்தவர். அவர் மீதும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் இப்போது வழக்குகள் அணிவகுக்கின்றன. இருவரும் அவ்வப்போது நீதிமன்றத்தை நாடி, ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களை பெற்று வருகிறார்கள்.

ப.சிதம்பரத்திற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் வாங்கிய விவகாரம் ஆகியவை தலைவலியாக நிற்கின்றன. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவரது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து எந்த நேரமும் ப.சிதம்பரம் கைதாகலாம் என்கிற சூழல் எழுந்தது.

ஐஎன்எக்ஸ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

காங்கிரஸ் கட்சியே முதலில் இதில் பெரிதாக ரீயாக்ட் செய்யாவிட்டாலும், பிரியங்கா காந்தியின் ஆதரவைத் தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ராகுல் காந்தியும் இன்று மதியம் மத்திய அரசைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

தமிழகத்தை சேர்ந்த முக்கிய தலைவராக ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ ஆகியோர் குரல் கொடுத்தனர். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பெரிதாக ரீயாக்‌ஷன் இல்லை.

INX Case Live Updates : ஐ.என்.எக்ஸ் வழக்கு : மத்திய அரசை விமர்சனம் செய்த ராகுல் காந்தி

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஷ்மீர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தார். ப.சிதம்பரம் விவகாரத்தில் உடனடியாக கருத்து எதுவும் கூறவில்லை. அந்தக் கட்சியை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் தன்னிடம் கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் மட்டும், ‘இது பழிவாங்கும் நடவடிக்கை’ என கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி உள்ளிட்ட விவகாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மனதில் வைத்து திமுக மவுனம் காத்ததாக கூறப்பட்டது.

எனினும் இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர். வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார்’ என கூறினார்.

இடதுசாரிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக இதுவரை கருத்து கூறவில்லை. சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் சுதந்திரதின உரை குறித்து ப.சிதம்பரம் பாசிட்டிவாக பேசியிருந்தார். அது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், ‘ப.சிதம்பரத்திற்கு அப்படிப் பேச என்ன நிர்ப்பந்தமோ?’ என கூறியிருந்தார். அவரும் ப.சிதம்பரத்தை நோக்கிய நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார், ‘ப.சிதம்பரம் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும்’ என காட்டமாக ப.சிதம்பரத்தை சாடியிருக்கிறார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram news inx media case enforcement directorate mk stalin reaction