CPI Leader R Nallakannu Vacated Chennai T Nagar Rental House: வீடு காலி செய்த பிரச்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்காக எழுந்த குரல்கள், பொதுவாழ்வில் அவருக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியது. கடைசியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போனில் பேசி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கட்சி மாறுபாடுகளை கடந்து அனைவரின் நன் மதிப்பையும் பெற்றிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தி.நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஒரு எளிய வாடகை வீட்டில் அவர் வசித்து வந்தார். அந்த வீட்டை வெள்ளம் சூழ்ந்த காலகட்டங்களில் உறவினர் வீடுகளில் அவர் தஞ்சம் அடைந்ததும் உண்டு.
Read More: 12 வருடமாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு! என்ன காரணம்?
நல்லகண்ணு வசித்து வந்த பகுதியில், வீட்டு வசதி வாரியம் வேறு கட்டுமானப் பணிகளை செய்ய இருக்கிறது. எனவே அங்கு வசிப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தது. வீட்டு வசதி வாரியத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து நல்லகண்ணு, அதே ஏரியாவில் வசித்த தியாகி கக்கனின் மகன் உள்ளிட்டோர் வீடுகளை காலி செய்துவிட்டு கிளம்பினர்.
நல்லகண்ணு, சென்னை கே.கே.நகரில் ஒரு வீட்டில் குடியேறினார். மூத்த தலைவரான அவருக்கு மாற்று வீடு வழங்காமல், வீட்டு வசதி வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்ததை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்தனர். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனடியாக அவருக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Read More: ‘வீட்டை காலி செய்யச் சொன்னதால் மன உளைச்சலுக்கு ஆளானேன்’ – நல்லகண்ணு
நல்லகண்ணுவை நடத்திய விதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகவும் அமைந்தது. இந்தச் சூழலில் நேற்று (மே 11-ம் தேதி) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்போனில் நல்லகண்ணுவை தொடர்புகொண்டு பேசினார்.
‘தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், தங்களுக்கும் கக்கன் மகனுக்கும் வீடு ஒதுக்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்’ என நல்லகண்ணுவிடம் அவர் தெரிவித்தார். அப்போது நல்லகண்ணு, ‘எனக்காக சிறப்பாக எதையும் செய்யவேண்டாம். எல்லோருக்கும் சட்டப்படி எது செய்வீர்களோ, அதைச் செய்யுங்கள்’ எனக் கூறியதாகத் தெரிகிறது.
நல்லகண்ணுவுக்காக எழுந்த குரல்களும், அரசின் உடனடி ரீயாக்ஷனும் இத்தனை ஆண்டுகால அவரது பொது வாழ்வுக்கு ஒரு அங்கீகாரம் என்றே கூறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.