விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யுவராஜ் என்பவர் விஜய் ரசிகர். அதே பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு (22) என்பவர் ரஜினி ரசிகர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.
Advertisment
தற்போது ஊரடங்கு உத்தரவால் 2 பேரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது போதை தலைக்கேறியதும் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது. ஒருகட்டத்தில் ஒருவருக் கொருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு கைகளால் யுவராஜை கொடூரமாக தாக்கி கீழே தள்ளினார். இதில் யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதனை பார்த்ததும் தினேஷ்பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு யுவராஜுன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர்.
அவர்கள் யுவராஜை தட்டி எழுப்பி பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று யுவராஜுன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு பிடித்தமான சினிமா நடிகரில் யார் அதிகம் நிதி கொடுத்தது என்ற காரணத்திற்காக மோதிக் கொண்டு உயிர் விட்டுருப்பதை என்னவென்று சொல்வது!?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”