ஹெச். ராஜா சர்ச்சை பேச்சு : நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் ஹெச். ராஜா . உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
Advertisment
ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு வைரலான வீடியோ
உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையினரையும் மிகவும் தரக்குறைவாகவும் பேசினார் ஹெச். ராஜா. அந்த வீடியோ நேற்றிரவில் இருந்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது.
ஜனநாயக நாட்டில் மிக முக்கிய அங்கமாமத் திகழும் ஒரு அமைப்பினை எப்படி இவ்வளவு தரக்குறைவாக பேசலாம் என்றும் ஹெச். ராஜா மீது சட்டப்பூர்வமாக நடவடுக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் பலதரப்பட்ட மக்கள்.
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கேட்ட கேள்விகளுக்கு தொலைபேசி வாயிலாக பதில் கூறிய ஹெச். ராஜா, இந்த குரல் என்னுடையது கிடையாது என்றும், உயர் நீதிமன்றத்திற்கு ஆதரவாகவே நான் பேசினேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களை நேரில் சந்தித்தார் ஹெச். ராஜா. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது “நான் நீதிமன்றங்களை மதிப்பவன். நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று பதில் கூறியுள்ளார்.
சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கேட்டுக் கொண்ட பின்பு ஹெச். ராஜா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.