Sujith Wilson rescue operation failed fire officer Priya Ravichandran shares her experience : நான்கு நாட்களாய் கடும் போராட்டம். சுஜித்தை மீட்டே தீர வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே மையமாக கொண்டு நூற்றுக் கணக்கானோர் நடுக்காட்டுப்பட்டியில் திரண்டிருந்தனர். இருப்பினும் சுஜித்தினை சடலமாகவே மீட்க முடிந்தது அனைவருக்கும் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியது. திருச்சி தீயணைப்புத் துறை துணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரனும் அந்த நூற்றுக் கணக்கான அதிகாரிகளில் ஒருவர். அவர் ஜே.டபிள்யூ. எஃப் ஆன்லைன் இணையத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு குழந்தை தற்போது இல்லை என்ற சோகம் எனக்கு புரிகிறது. ஆனால் அந்த குழந்தையை காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகப்பெரியவை. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது தொடர்பாக அன்று மாலை 5 மணிக்கே எங்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. செய்தியை கேட்டவுடன் நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அப்போது குழந்தை 24 அடி ஆழத்தில் தான் இருந்தது.
இதில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. இது போன்ற சிக்கலான மீட்புப் பணியில் ஈடுபட்டு குழந்தையை காப்பாற்றும் அனுபவம் எங்களிடம் பலருக்கும் கிடையாது. அதே போன்று குழந்தையை மீட்பதற்கு போதுமான தொழில்நுட்பமும் நம்மிடமில்லை. அங்கு நிலவிய சூழலுக்கு ஏற்றவாறும், குழந்தை சிக்கிய விதம், ஆழ்துளைக் கிணற்றின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்த குழந்தையை விரைவாக மீட்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்ய முற்போட்டோம்.
இதற்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 12 குழந்தைகளை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். ஆழ்துளைக் கிணற்றில் குழந்தையை காப்பாற்ற தேவையான இடம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பெரிய பெரிய கருவிகளை வைத்து குழந்தைகளை எடுப்பது போன்று மீட்புப் பணி இருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட சுஜித் உடல்!
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய போர்வெல் இயந்திரங்கள் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் 5 இடங்களில் இந்த இயந்திரங்கள் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. விழுப்புரம் மற்றும் மதுரையில் இருந்து இயந்திரங்கள் கொண்டுவரப்படுதற்கு முன்பே குழந்தையை எப்படியேனும் மீட்டுவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். குழந்தையை மீட்க 24 அடி வரை சென்ற போது நாங்கள் குழந்தையின் கைகளை பார்க்க முடிந்தது. குழந்தையை அப்படியே மேலே எடுத்துவிடலாம் என்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்துவிட்டது. அவன் அங்கே சிக்கிக் கொண்டதால் அவனை காப்பாற்றுவது கடினமாக அமைந்துவிட்டது.
தன்னார்வத்துடன் சிலர் குழந்தையை காப்பாற்ற முன்வந்தனர். ஆனால் எங்களின் இயந்திரங்கள் கொண்டு குழந்தையை மீட்க முயன்றோம். ஆனால் 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு நாம் எதிர்பார்த்தைவிட மிகவும் மோசமாக இருந்தது. அந்த பகுதி மழையால் முழுமையாக ஈரமாகியிருந்ததால் மேலும் மேலும் குழந்தை கீழ்நோக்கி உள்ளே நகரத்துவங்கியது. பக்கத்தில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க முயன்ற போதும் கடினப்பாறைகளால் மீட்புப் பணி மிகவும் தொய்வடையத் துவங்கியது.
மேலும் படிக்க : சுஜித்தை மீட்க தடையாக இருக்கும் Quartz Crystalline பாறைகள் – அதிர வைக்கும் பின்னணி
அங்கு பணியில் இருந்த அனைவருக்கும் அந்த குழந்தையை மீட்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக அமைந்தது. மிகச்சிறந்த ட்ரில்லிங் மெஷின்கள் கொண்டு வரப்பட்டும் கூட பாறையை வெட்டி துளையிட முடியவில்லை.
குழுவாக செயல்பட்டது குறித்து
கிட்டத்தட்ட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மீட்புப் பணியினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நாங்கள் எங்களைச் சுற்றி நடக்கும் உலகை மறந்துவிட்டு குழந்தை சுஜித்தை மீட்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டு வந்தோம். கழிப்பறை செல்லவோ, கொஞ்சம் இளைப்பாறவோ கூட எங்களுக்கு நேரம் இல்லை. எங்களுக்கு தான் களநிலவரம் என்னவென்று தெரியும். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி.
நாங்கள் 90 அடி வரை சுரங்கம் அமைத்து பின்னர் குழந்தையை மீட்க திட்டம் வகுத்திருந்தோம். வீரர்கள் அத்தனை அடி ஆழத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்ட வண்ணம் இருந்தது. அதே நேரத்தில் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கபட்டுக் கொண்டு தான் இருந்தது. கேமராவில் அவனை மானிட்டர் செய்து கொண்டே இருந்தோம். தங்களின் உயிரையும் துச்சமென மதித்து வீரர்கள் இருவர் உள்ளே இறங்கி பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்து வந்தனர் என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் பிரியா ரவிச்சந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.