scorecardresearch

Tamil Nadu news today updates : நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ல் தூக்கு

சென்னை பெட்ரோல் டீசல் விலை : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78.34க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை ரூ. 72.67 ஆகும்

Tamil Nadu news today updates kaanum pongal 2020 : இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் மெரினாவில் கூடுவது வழக்கம். இந்நிலையில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திட கூடாது என்பதற்காக காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது. மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் இணை ஆணையர்களும் 10 ஆயிரம் காவல்துறையினரும் இன்று சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் படிக்க :  3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி, 10,000 காவலர்கள் : மெரினாவில் பாதுகாப்பான காணும் பொங்கல்!

ரஜினியும் கமலும் கலந்த கலவை தான் தனுஷ் – தெறிக்கவிடும் பட்டாஸ் படம் குறித்து ஒரு வீடியோ

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. 15ம் தேதி அவனியாபுரம், 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூர் என்று வரிசையிடப்பட்டு முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 700 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Live Blog

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
Highlights

  21:45 (IST)17 Jan 2020
  நிர்பயா வழக்கு: குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என பவன்குப்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

  நிர்பயா வழக்கு: குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

  20:56 (IST)17 Jan 2020
  தமிழகத்தில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் – ஏல அறிவிப்பை ரத்து செய்ய டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து உரிமம் வழங்குவது முறையல்ல. ஏற்கெனவே 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  20:22 (IST)17 Jan 2020
  நிர்பயா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்</div>

  நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிர்பயா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

  19:55 (IST)17 Jan 2020
  எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது

  எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

  18:44 (IST)17 Jan 2020
  தகவல் தொடர்பு சேவைக்காக இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள் வின்னில் பாய்ந்தது

  தகவல் தொடர்பு சேவைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

  17:59 (IST)17 Jan 2020
  சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் – திருமாவளவன்

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துகொள்ள முடியும். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

  17:18 (IST)17 Jan 2020
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 57 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா டெல்லி மாடல் டவுன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  17:16 (IST)17 Jan 2020
  நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை

  நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை நிராகரித்த ஆவணத்தை டெல்லி திகார் சிறைத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. குற்றவாளிகளிகளை தூக்கிலிட திகார் சிறைத்துறையின் கோரிக்கையை ஏற்று குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பித்துள்ளது.

  16:59 (IST)17 Jan 2020
  குரூப் 4 முறைகேடு புகாரில் எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை

  குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

  16:56 (IST)17 Jan 2020
  திருச்சி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் ஒருவர் பலி

  திருச்சி விமான நிலையம் பகுதியிலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் துப்பாக்கிச்சுடும் கிளப் நடத்தி வந்தார். இன்று காலை அங்கே துப்பாகிச் சுடும் சத்தம் கேட்டதா அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தபோது சசிகுமார் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்தார். துப்பாக்கிச்சுடும் பயிற்சி கிளப் நடத்தி வரும் இவருக்கு உண்மையான துப்பாக்கி கிடைத்தது எப்படி என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  16:24 (IST)17 Jan 2020
  நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்க திகார் சிறைத்துறை கோரிக்கை

  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கிலிடும் ஆணையை பிறப்பிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு திகார் சிறைத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

  16:00 (IST)17 Jan 2020
  பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரம் என்ன? – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு

  சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தைக் கேட்டு கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு அளித்துள்ளார்.

  14:34 (IST)17 Jan 2020
  குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம்

  டெல்லி நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரத்தில் டெல்லி அரசு எந்த தாமதமும் செய்யவில்லை என்றும் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பது தான் அரசின் எண்ணமும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

  14:30 (IST)17 Jan 2020
  தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான மனுக்கள்

  தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  14:12 (IST)17 Jan 2020
  ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

  பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி துக்ளக் ஆண்டுவிழாவில் பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

  14:08 (IST)17 Jan 2020
  திமுக – காங்கிரஸ் பிரிவினை

  திமுக – காங்கிரஸ் கட்சியின் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதே தான் தற்போது நடைபெற்று வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

  12:42 (IST)17 Jan 2020
  நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவும் நிராகரிப்பு

  உள்துறை அமைச்சகம் இன்று குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த். இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றவாளிகள் மறுசீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  12:35 (IST)17 Jan 2020
  சி.ஏ.ஏக்கு எதிராக பஞ்சாபில் தீர்மானம்

  கேரள சட்டசபையில் கடந்த மாதம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். பாஜக எம்.எல்.ஏ ராஜகோபால் தவிர அனைவரும் அந்த தீர்மானத்தை ஒரு மனதாக ஆதரித்த நிலையில் பஞ்சாப் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

  12:19 (IST)17 Jan 2020
  வில்சன் மரணம் : திமுகவின் நிதி வழங்கப்பட்டது

  கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த ரூ. லட்சம் நிதி வில்சனின் மனைவி ஏஞ்சலிடம் வழங்கப்பட்டது.

  12:09 (IST)17 Jan 2020
  விவசாயக்கடன் தள்ளுபடி வழக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

  தமிழகத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை வருகின்ற ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். 

  12:08 (IST)17 Jan 2020
  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட மதுரை வந்த தேனி எம்.பி

  மதுரை அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டினை பார்வையிட மதுரை வந்துள்ளார் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்!

  11:32 (IST)17 Jan 2020
  சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் : சானியா ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறாது ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டிகள். இதில் இந்திய வீரங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சானியா மிர்சா – நாடியா ஜோடி நாளை சாங் – சுவாய் – பெங்க் சுவோ இணையை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

  11:16 (IST)17 Jan 2020
  எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கு : குற்றவாளிகள் மீது பாய்ந்தது உபா சட்டம்

  பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், தௌஃபிக் மற்றும் அப்துல் சமீம் மீது போடப்பட்டது.

  11:14 (IST)17 Jan 2020
  NPR – தலைமை செயலாளர்கள் கூட்டம் புறக்கணித்த மேற்குவங்கம்.

  தேசிய மக்கள் தொகை பதிவேட்டு குறித்த கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தலைமைச் செயலாளர்கள் பலரும் அங்கே பங்கேற்றுள்ள நிலையில் கூட்டத்தையே நிராகரித்துவிட்டது மேற்குவங்கம்.

  11:12 (IST)17 Jan 2020
  முகேஷ் சிங்கின் கருணை மனு

  நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது.

  10:47 (IST)17 Jan 2020
  இளவட்டக்கல் தூக்கிய வடலிவிளை மக்கள்!

  நெல்லை ராதாபுரம் தொகுதியில் உள்ள வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. அதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பங்கேற்று தங்களின் வீரத்தினை வெளிப்படுத்தினர். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அத்தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை.

  10:32 (IST)17 Jan 2020
  எம்.ஜி.ஆர் பிறந்த நாள் : அதிமுக தலைமையகத்தில் பழனிசாமி மரியாதை

  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தார். அவருடன் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

  10:29 (IST)17 Jan 2020
  ஈரான் தாக்குதலில் 11 பேர் காயம்

  ஈரான் கடந்த வாரம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டொனால்ட் ட்ரெம்ப் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

  10:24 (IST)17 Jan 2020
  இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாம் ஒருநாள் போட்டி

  இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 01:30 மணிக்கு இந்த போட்டி துவங்க உள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.

  09:49 (IST)17 Jan 2020
  சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்

  திருச்சி மணப்பாறை அருகே அமைந்துள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. 700 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. புதுக்கோட்டை வன்னியன் விடுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 450 காளைகளும் 210 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. பழனி நெய்க்காரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 400 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

  09:44 (IST)17 Jan 2020
  பெட்ரோல் டீசல் விலை குறைவு

  பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ. 78.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ. 72.67க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  09:43 (IST)17 Jan 2020
  சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவில்கள் : நெல்லையப்பர் கோவில் முதலிடம்

  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம், தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக நெல்லையப்பார் காந்திமதி அம்பாள் கோவிலை தேர்வு செய்துள்ளது. இரண்டாம் இடத்தை சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் பெற்றுள்ளது.

  களியக்காவிளை செக்-போஸ்ட்டில்  பணியில்  இருந்த காவலர் வில்சன் 8ம் தேதி மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை தேடிவந்த காவல்துறையினர் அவர்கள் அப்துல் சமீம் மற்றும் தௌஃபிக் என்பதை சி.சி.டி.வி அடையாளங்களுடன் கண்டறிந்தனர். அவர்கள் இருவரும் 14ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் காவல்துறையிடம் பிடிபட்டனர். அவர்கள் 16ம் தேதி காலை தக்கலை காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் படிக்க : வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil nadu news today live updates kaanum pongal 2020 chennai weather tamil nadu politics