தமிழ் பேசும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் முத்துவேல் கருணாநிதியாகிய நான்

கலைஞர் கருணாநிதி என்றும் தலைவர் தமிழக மக்களின் மனதில் எங்கும் நீங்காத இடம் பிடித்தவர்.  இந்த முத்துவேல் கருணாநிதி திராவிட அரசியலின் முத்தாக, முதுகெலும்பாக 50 ஆண்டுகள் நிலைத்து நின்றார். 14ல் போராட்ட களம் கண்ட உடம்பிற்கு ஓய்வு இன்று தான் தேவைப்பட்டிருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஊரில் 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி பிறந்தார்.

அஞ்சுகம் அம்மையாருக்கும் முத்துவேல் அய்யாவிற்கும் மூன்றாவது மகனாக இசை வேளாள சமூகத்தில் பிறந்தவர் கலைஞர் கருணாநிதி.

இவருக்கு முன்னால் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் முறையே பெரியநாயகம், சண்முகசுந்தரம் ஆவார்கள்.

இயக்கங்களில் கருணாநிதி

தன்னுடைய 14வது வயதில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவாரூரில் ஒரு சுயமரியாதைக் கூட்டத்தில் பங்கேற்ற பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சில் ஈடுபாடடைந்து தான் தன்னையும் திராவிட இயக்கத்திற்குள் இணைத்துக் கொண்டார் மு. கருணாநிதி.

அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் அழகிரி என்று தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டினார் கலைஞர்.

மாணவர் அணி செயலாளாரில் தொடங்கி பத்திரிக்கையாளாராக

அழகிரியின் பேச்சினால் அதிகம் கவரப்பட்ட கருணாநிதி பின்னாளில் தன்னுடைய திருவாரூர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவர்கள் அணி ஒன்றையும் கையெழுத்துப் பிரதி பத்திரிக்கை ”மாணவ நேசன்” என்ற பெயரில் ஒன்றையும் 1941ல் நடத்த ஆரம்பித்தார். அது ஒரு மாத இதழ் ஆகும்.

குடிசைப் பகுதிகளில் சென்று அங்கு வாழும் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்து அதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த கையெழுத்துப் பிரதி துண்டுப் பிரசுரம் தான் பின்னாட்களில் முரசொலியாக உருவெடுத்தது.

போராட்டக்கார கலைஞர்

1957ல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். அந்த காலத்தில் தான் இந்தி மொழித் திணிப்பு ஒரு பெரும் சவாலாக இருந்தது. அக்டோபர் மாதம் 13ம் தேதி 1957ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

கல்லக்குடியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இவர் நடத்திய போராட்டம் பின்னர் கட்சியில் இவருக்கு முக்கியமான இடத்தினை அளித்தது.

1963ம் ஆண்டு அண்ணாதுரையுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு மாநாட்டினை சென்னையில் நடத்தி அதற்காக இருவரும் சிறை சென்றார்கள்.

சட்டமன்ற உறுப்பினராக கலைஞர்

1957ல் சுயேச்சை வேட்பாளராக குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் கருணாநிதி.
அச்சமயம் அவருக்கு வயது 33 ஆகும். பின்னர் அதனைத் தொடர்ந்து 12 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசியல்வாதிகள் யாரும் செய்திடாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 1984ல் மட்டும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1967ல் முதன்முறையாக திமுக அரசியல் களம் கண்டது. அப்போது கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

முதல்வராக கருணாநிதி

தமிழகத்தில் ஐந்து முறை கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தன்னுடைய 45வது வயதில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது அத்தனை எளிதான காரியமில்லை. ஏற்ற இறக்கங்களையும் சவால்களையும் தாண்டியே இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த 13 வருடம் என்பது மிகப்பெரும் இடைவெளி. மற்றொரு கட்சியாக இருந்திருந்தால் வாழ்ந்த தடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

1972ல் அதிமுக உருவானது. அன்றிலிருந்து இன்று வரை அதிமுக ஆளும் கட்சியென்றால் திமுக எதிர்கட்சி. திமுக ஆளும் கட்சியென்றால் அதிமுக எதிரகட்சி. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு தமிழகம் எங்கும் பலத்த ஆதரவு இருந்த நிலையிலும் கூட அண்ணா நகர் தொகுதியில் நின்று 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றவர் நம் கலைஞர்.

நாடகம் மற்றும் திரைப்பட துறைகளில் கருணாநிதி

எழுத்தாளர், நாடக் கலைஞர், கவிஞர், மற்றும் பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்ட கலைஞரின் முதல் நாடகம் பழனியப்பன் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பேபி டாக்கீஸில் 1944ல் நடத்தப்பட்டது.

தூக்கு மேடை நாடகத்தின் போது எம்.ஆர். ராதா இவருக்கும் கலைஞர் என்ற பட்டம் தந்தார்.

1947ல் ராஜகுமாரி படத்திற்கு முதன்முதலாக வசனகர்த்தாவாக பணியாற்றினார் கலைஞர். கலைஞரின் வசனத்தில் கடைசியாக வெளியான திரைப்ப்டம் பொன்னர் சங்கர் (2011) ஆகும்.

தன் வாழ்நாளில் 21 நாடகங்களிலும் 69 படங்களில் பணியாற்றியுள்ளார். அதில் எம்.ஜி. ஆருடன் மட்டும் சுமார் 9 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியின் குடும்பம் பற்றி

கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி ஆவார். இவருடைய மகன் தான் மு.க.முத்து. பத்மாவதி காலமான பின்பு தயாளு அம்மாளை 1948ல் மணந்து கொண்டார்.

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி – தயாளு அம்மாவின் திருமண அழைப்பிதல்

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் மு.க.தமிழரசு, செல்வி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் துணைவியார் பெயர் ராஜாத்தி அம்மாள். அவரின் மகள் தான் கனிமொழி.

இக்குடும்ப உறுப்பினர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள 

கலைஞர் கருணாநிதியின்  இலக்கியப் பணி

இதுவரை சுமார் 150ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் கலைஞர். அதில் சமூகம் சார்ந்த பத்து நாவல்களும், 6 சரித்திர நாவல்களும் அடங்கும். உடன்பிறப்பே என்று முரசொலியில் 1971ல் எழுத ஆரம்பித்த தொடரினை தன் உடல் நிலை மோசமாக மாறிய 2016 வரை எழுதியவர் கருணாநிதி. அவை அனைத்தும் கடிதம் போன்று எழுதப்பட்டவை. அதன் எண்ணிக்கை மட்டும் சுமார் 7000 ஆகும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதி நாட்கள் 

திமுகவில் தலைவராக பொறுப்பேற்ற 50 வருடத்தினை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில்  கருணாநிதியின் உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் கருணாநிதி. அவரின் உடல் உறுப்புகள் செயல்படாததை தொடர்ந்து இன்று மாலை (07/08/2018)  6.10 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.

இது குறித்த லைவ் அப்டேட்டினை தெரிந்து கொள்ள 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close