scorecardresearch

கருணாநிதி மரணம்: கடைசி நேர உருக்கக் காட்சிகள், கண்ணீரில் கோபாலபுரம்

DMK Chief Kalaignar Karunanidhi Death : கருணாநிதி மரணம், தமிழ்நாடு முழுவதும் திமுக.வினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

கருணாநிதி மரணம்: கடைசி நேர உருக்கக் காட்சிகள், கண்ணீரில் கோபாலபுரம்

Kalaignar Karunanidhi Death: கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மரணம் நிகழ்ந்த அன்று நிகழ்ந்த உருக்கமான நிகழ்வுகளின் தொகுப்பு இது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பும் பதற்றமும் நிறைந்த ஆவணம் அது! அந்தத் தொகுப்பு இங்கே!

திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவுக் குழாயில் நோய் தொற்று, காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு, பிறகு உடல்நிலை சீரானது என மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட அவரது உடல்நிலை, நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 6) மோசமானது.

கருணாநிதி ஹெல்த் கிராஃப்: இதுவரை வெளியான 6 அறிக்கைகளில் கூறியது என்ன? To Read, Click Here

இந்நிலையில், காவேரி மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், ‘திமுக தலைவர் கருணாநிதி மாலை 06.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்’ என்று குறிப்பிட்டது. லட்சக்கணக்கான தொண்டர்களின் உயிராய் இருந்த கலைஞர் கருணாநிதி, நேற்று தனது இன்னுயிரை காற்றில் கரைத்து விட்டார். 80 ஆண்டுகாலம் ஓய்வின்றி ஓடியாடிய சூரியன் நேற்று அஸ்தமனம் ஆனது.

எண்ணற்ற தொண்டர்களை தவிக்கவிட்டுச் சென்ற கலைஞர் கருணாநிதி

Karunanidhi Death News Today, DMK Chief Kalaignar Karunanidhi LIVE Updates: கருணாநிதி காலமானார்

07.05 AM: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு” என்றார்.

06.55 AM: கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, காமராஜ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டப்பேரவை தலைவர் தனபால் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், ஸ்டாலினுக்கு அனைவரும் ஆறுதல் கூறினர். கருணாநிதிக்கு உரிய மரியாதை அளிக்கும் தமிழக அரசு, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மட்டும் ஏன் அனுமதி தர மறுக்கிறது என்பதே பாமர மக்களின் கேள்வியாக உள்ளது.

06.45 AM: பா.விஜய், அபிராமி ராமநாதன், மயில்சாமி உள்ளிட்டோர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

06.34 AM: மெரினாவில் இடம் அளிக்கக் வேண்டும் என திமுக தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முன்னாள் முதல்வர் ஜானகிக்கு மெரினாவில் இடம் தர அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது’ என செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று காலை 08.30 மணிக்கு இம்மனுவின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

06.31 AM: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

06.28 AM: நடிகர் ராதாரவி கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ராதாரவியின் தந்தையும், நடிகவேளுமான எம்.ஆர்.ராதா தான் கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை சூட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

06.25 AM: அஞ்சலி செலுத்திவிட்டு ரஜினிகாந்த் வெளியே வந்து காரில் ஏறிய போது, தொண்டர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர், ‘எங்களையும் கலைஞரை பார்க்க விடுங்கள்’ என கோஷமிட்டனர்.

06.15 AM: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். நேற்று இரவு, கோபாலபுரம் வீட்டிற்கே நேரடியாக சென்று ரஜினி அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது ராஜாஜி அரங்கத்திற்கு வந்தும் அஞ்சலி செலுத்தினார். மனைவி லதா, மருமகன் தனுஷ், மகள் சௌந்தர்யா ஆகியோரும் உடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அனைவருக்கும் தனித்தனியாக ரஜினி ஆறுதல் கூறினார்.

06.10 AM: டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

06.00 AM: ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

05.45 AM: ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் வந்துள்ளார்.

05.25 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கே, கண்ணாடி பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ‘கலைஞர் மறைந்தார்’ என இன்றைய முரசொலி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாளிதழ் கருணாநிதி உடலுக்கு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

04.00AM: பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம் ஆனால் தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

02.30 AM: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கருணாநிதி இறந்திருந்தால், கண்டிப்பாக அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

02:20 AM: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், கருணாநிதியின் இறப்பு குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

02:00 AM: சிஐடி காலனி வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். நடிகர்கள் சதீஷ், கலையரசன், கிருஷ்ணா, யுவன் ஷங்கர் ராஜா, வின்சன்ட் அசோகன், ஆர்த்தி கணேஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

01: 40 AM: கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்ல வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

01.15 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

01.10 AM:  மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக தொடர்ந்த மனுவின் விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக மனு மீது காலை 08.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

00.55 AM: கிரிக்கெட் வீரர்கள், சேவாக், அஷ்வின், சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப் ஆகியோரும் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

00.45 AM: நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்! சட்டமும் அரசும் தயை கூர்ந்து அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தல் நலம். அவர் தமிழை செம்மொழி ஆக்கி வள்ளுவனுக்கு கோட்டமும் சிலையும், தமிழ் மேதைகள் அனைவருக்கும் மெரினாவில் சிலை வைத்தவர் அன்றோ!” என்று குறிப்பிட்டுள்ளார்.

00.20 AM: மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் மனமுருகி கண்ணீருடன் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அப்பா என அழைத்ததைவிட தலைவரே என்று அழைத்தது தான் அதிகம். எப்போதும் சொல்லிவிட்டு செல்லும் நீ, இப்போது ஏன் சொல்லாமல் சென்றாய்?. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!” என்று அந்த கடிதத்தில் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் குடும்பத்தினர்

00.10 AM:  வழக்கறிஞர் துரைசாமி தனது வழக்குகளை வாபஸ் பெற்றிருப்பது திமுகவிற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த 5 வழக்கையும் காரணம் காட்டி தான், சட்ட சிக்கல் உள்ளது என தமிழக அரசு மெரினாவில் இடம் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

11.55 PM: வழக்கறிஞர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “5 வழக்குகள் உள்ளதால், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என்பதை ஏற்க முடியாது. எங்களுக்கு தேவை, கருணாநதிக்கு மெரினாவில் இடம் வேண்டும். எனவே, நான் தொடுத்த நான்கு வழக்குகள் மற்றும் பாமகவின் பாலு தொடர்ந்த வழக்கு என மொத்தம் 5 வழக்கும் வாபஸ் பெறப்படுகிறது. நாங்கள் தொடுத்த வழக்கை காரணம் காட்டி தான், தமிழக அரசு மெரினாவில் இடமளிக்க அனுமதி மறுத்தது. நாங்கள் எங்கள் வழக்குகளை வாபஸ் பெறுகிறோம். அண்ணா சமாதி உள்ள இடம் கடலோர பாதுகாப்பு மண்டலம் பகுதிக்கு வரவில்லை. எனவே, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை” என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

11.40 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தொடர்ந்த மனுவின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கை, ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் ,மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு விசாரிக்கிறது. தீர்ப்பின் முடிவு இரண்டு மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11.35 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

11.30 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதியின் பூத உடல்

11.25 PM: நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

11.15 PM:  கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை, ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் ,மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில்,  தலைமை நீதிபதி வீட்டின் முன்பு, திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணைக்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறி, போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஸ் வீட்டிற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஐகோபால் வந்துள்ளார்.

11.05 PM: கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா நாளை சென்னை வருகின்றனர்.

11.00 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்

10.50 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்கு நாம் செய்யும் மரியாதை, கடமை’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10.40 PM: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ‘ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

10.30 PM : சென்னை மெரினா கடற்கரையில் யாரையும் அடக்கம் செய்யக் கூடாது என பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்து இந்த வழக்கை தாமாக முன் வந்து வாபஸ் வாங்கிக் கொண்டார்.

10.25 PM : காவேரி மருத்துவமனையிலிருந்து கிளம்பி 1 மணி நேரமாகியும் 1 கி.மீ மட்டுமே கடந்து வருகிறது கலைஞரின் உடல் ஏந்திய ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது.

10.20 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, நாளை (8.8.18) நடப்பதாக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

10.10 PM : திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி நாடு முழுவதும் நாளை ஒருநாள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10.00 PM : மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய இடம் ஒதுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த், கி.வீரமணி, ராமதாஸ், திருநாவுக்கரசர், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், பாலகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், வைரமுத்து வேண்டுகோள்

09.45 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கர்நாடாகாவில் நாளை விடுமுறை அறிவிப்பு

09.40 PM : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்து சேர்ந்தார்.

09.30 PM : அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கருணாநிதி மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

09.15 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷிடம் திமுக மனு அளித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

09.10 PM: வேண்டும் வேண்டும்… மெரினா வேண்டும்… என கருணாநிதியின் உடல் கொண்டுச் செல்லப்படும் ஆம்புலன்ஸ் முன் தொண்டர்கள் முழக்கம்.

09.00 PM: காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. வழிநெடுகிலும் நின்றுள்ள தொண்டர்களின் அழுகுரல் சத்தம் விண்ணை பிளக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் பூத உடல்

08.50 PM: ‘மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்து நெருப்போடு விளையாடாதீர்கள்’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இடம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்

08.40 PM: சென்னை காவேரி மருத்துவமனை வளாகத்தில் தடியடி. மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய, இடம் ஒதுக்கக் கோரி திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவமனையை விட்டு தொண்டர்கள் கலைந்து செல்லாததால், போலீஸ் தடியடி நடத்தி வருகிறது.

08.25 PM: அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

08.15 PM:  மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்திருக்கும் நிலையில், மீண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது என ஸ்டாலின் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

08. 08 PM: பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடல் இரவு 08.30 மணி முதல் நள்ளிரவு 01:00 வரை கோபாலபுரம் இல்லத்திலும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை சி.ஐ.டி. காலனி இல்ல வீட்டிலும், பின்னர் அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலிலும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகனின் அறிக்கை

08:00 PM: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், “அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. பல சட்ட சிக்கல் இருக்கும் காரணமாக அங்கு இடம் ஒதுக்க முடியாது. கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கிறது” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

07:50 PM: செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “அண்ணா சமாதி அருகே, கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து பதில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

07:45 PM: மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி தனது ட்விட்டரில், “இந்தியா தனது மிகச் சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தமிழ்நாடு தனது நம்பிக்கை நாயகனை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

07:35 PM: மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவின் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அண்ணாவின் இதயத்தை அவரிடமே கொடுக்க மெரினா செல்கிறார் கலைஞர் கருணாநிதி.

07:30 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில்,  “இந்தியா தனது மிகச் சிறந்த மகனை இழந்துள்ளது. கருணாநிதியின் குடும்பத்தாருக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்ற இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

07:25 PM: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பையொட்டி, 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

07: 20 PM:  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில், “ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து இருக்கும் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கு வலிமையை தர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:10 PM: ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

07:06 PM: 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். கருணாநிதியின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு என தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:00 PM: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், “திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

06: 50 PM: ‘இந்தியாவின் மாபெரும் தலைவரை இழந்துவிட்டோம்’ என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

06.46 PM: கருணாநிதி காலமானார் என்ற அறிவிப்பை தொடர்ந்து, தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் அழும் காட்சி நெஞ்சை உருக்கமாக உள்ளது.

06: 42 PM: திமுக தலைவர் கருணாநிதி மாலை 06.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

கருணாநிதி காலமானார் என அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை

06:35 PM: டில்லியில் நாளை நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவசரமாக இன்று இரவு சென்னை திரும்புகிறார்.

06: 30 PM: கோபாலபுரம் இல்லத்தில், வழக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டு, அந்த இடத்தில், ஒரு நபர் படுக்கக் கூடிய நீளத்தில் மேஜை போடப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரம் இல்லத்தில் அதிகளவு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது.

06.25 PM:  கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு பணியில் அணிவகுக்கப்பட்டுள்ளனர்.

06:15 PM: கருணாநிதியின் தாய், தந்தை புகைப்படம் கோபாலபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

06: 05 PM: இன்று மாலை முதல் நாளை வரை அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

06:00 PM:  காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் – போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மருத்துவமனை உள்ளே நுழைய முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

05:50 PM: நெல்லை, தூத்தக்குடி, கன்னியாகுமரி பகுதியில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுவும், மதுரை சென்னை இடையே தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

05: 42 PM:  கருணாநிதி குடும்பத்தினர், கோபாலபுரம் இல்லத்தில் திரண்டுள்ளனர். அனைவரின் கண்களிலும் கண்ணீர். இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. QRT விரைவு அதிரடிப்படையினர், SAG (சிறப்பு செயலாக்க குழுவினர்) காவேரி மருத்துவமனை முன்பு குவிப்பு.

05.36 PM: கருணாநிதி உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். இரவு 07.20 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

05.33 PM: துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு கண்ணீருடன் மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

கண்ணீருடன் காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள்

05.30 PM: ராஜாஜி ஹாலில் சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையில் காவல்துறையினரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

05: 25 PM: தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியோடு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது

05:12 PM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் நான்காவது தெருவில், போலீசார் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

05:05 PM: காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், பாதுகாப்பு கவசத்தை அணிந்து வருகின்றனர். கோபாலபுரம் நோக்கி பல்வேறு திமுக தொண்டர்கள் அணிவகுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு கவசத்துடன் காவல்துறை

04:55 PM: மத்திய உள்துறை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விவரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4: 45 PM: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் தொண்டர்கள் கதறி அழும் நிகழ்வை நம்மால் பார்க்க முடிந்தது. ‘நாங்க ஏமாந்து விட்டோம்’ என தொண்டர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கண்ணீருடன் காட்சியளிக்கும் தொண்டர்கள்

4: 33 PM: மிகவும் கவலைக்கிடமான நிலையில் கருணாநிதி இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நிலை மிக மிக மோசமாக, நிலையற்றதாக உள்ளதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

4:30 PM: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை. டிஜிபி ராஜேந்திரனுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

4:20 PM: கருணாநிதி உடல்நிலை குறித்து இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அறிக்கை வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4:15 PM: ராஜாஜி ஹால் சென்னை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய, அதிகாரிகள் துப்பரவு பணியாளர்கள் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4:05 PM: அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு. டிஜிபி இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், ஆணையர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும், டி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு. விடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவு.

அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கும் டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை

3:40 PM: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வந்து சென்றதை தொடர்ந்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசினார். அடுத்த சில மணி நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

3:25 PM: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் கருணாநிதிக்கு என் பிரார்த்தனைகள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

3:10 PM: காவேரி மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு தொண்டர்கள் வருகை அதிகமானது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் சுமார் 1000 போலீஸார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

3:05 PM : முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் தலைவர்கள் அங்கிருந்து மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு திரும்பினர். முதல்வருடன் பேசப்பட்ட தகவல் குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. எனினும் அடுத்த சில மணி நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய முடிவுகள் குறித்து முதல்வருடன் விவாதித்ததாக தெரிய வந்திருக்கிறது.

2:50  PM : கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமானதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

2:30 PM : காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். திமுக தலைமையகமான அறிவாலயம் நிர்வாகிகள் ஜெயகுமார், பத்மநாபன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். கருணாநிதியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

2:15 PM: கருணாநிதியை நலம் விசாரிக்க நடிகர் வடிவேலு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

1:35 PM : அடுத்தடுத்த நலம் விசாரிக்க தலைவர்கள் வருகை, இன்னொரு பக்கம் ‘எழுந்து வா தலைவா’ என்கிற தொண்டர்களின் கோஷம் என உணர்ச்சி மயமாகி நிற்கிறது காவேரி மருத்துவமனை.

1:10 PM: நடிகர் அர்ஜூன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், ‘கருணாநிதியின் உடல்நிலை கவலை அளிக்கிறது. அவர் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

12:30 PM: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். உடல் நிலை சரியாகும் என நம்பிக்கை தெரிவித்து பேட்டி கொடுத்தார்.

11:55 PM: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். விரைவில் குணமாக தனது விருப்பத்தை தெரிவித்து பேட்டி கொடுத்தார் வாசன்.

11:25 AM: காவேரி மருத்துவமனைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்தியலிங்கம் மற்றும் புதுவை அமைச்சர்கள் வருகை தந்தனர். கருணாநிதி உடல்நிலை குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

10:55 PM : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

10:20 AM: கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையை நேற்று எட்டியதை தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று காலை 10 மணி வரை உடல்நிலையில் முன்னேற்றம் குறித்த தகவல் எதுவும் இல்லை.


9:35 AM: காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வந்து சேர்ந்தார். நேராக மருத்துவமனை உள்ளே சென்ற அவர், மீடியாவிடமோ தொண்டர்களிடமோ எதுவும் கூறவில்லை.

‘என் வயதில் இரண்டை எடுத்துக் கொள் நண்பா’! – கருணாநிதிக்காக உருக்கமுடன் சிவாஜி கணேசன் To Watch, Click Here

பீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம் To Read, Click Here

கருணாநிதியை நினைத்து கலங்கிய ராதிகா.. ட்விட்டரில் உணர்ச்சி பதிவு! To Read, Click Here

கருணாநிதி உடல்நிலை பின்னடைவு செய்தியால் குவிந்த தொண்டர் படை To Read, Click Here

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு : கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள் To Read, Click Here

9:00 AM: காவேரி மருத்துவமனைக்கும் இன்று கூடுதல் தொண்டர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karunanidhi health live updates11th day in kauvery hospital