தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் 'உங்களின் ஒருவன்' எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும் போது, அவரது அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கை என்றும், அவர் பா.ஜ.க-வின் 'டப்பிங்' குரல் என்றும் கூறியுள்ளார்.
'உங்களின் ஒருவன்' வீடியோவில் ஸ்டாலின் கூறியிருப்பது பின்வருமாறு:-
தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது, தமிழ்நாடும் தொடர்ந்து போராடுகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்குவது இல்லை. தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை வழங்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது.
நம் உரிமையை கேட்பதையே அற்பசிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது . பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன், முரண்பாடாக நினைப்பது இல்லை. கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை .
டெல்லி தேர்தல் முடிவு குறித்த பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்றுதான் இருந்தது. பழனிசாமியின் குரலே, பாஜகவுக்கான டப்பிங் குரல்தான். நாம் ‘கள்ளக் கூட்டணி’ என்று சொல்வதை பழனிசாமி நிரூபிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தோல்விகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவரின் கல்வி அவரின் தலைமுறையையே முன்னேற்றிவிடும். பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும். வேறு வழியின்றி பிரேன் சிங்கை ராஜினாமா செய்ய வைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளார்கள். பாஜக ஆளும் மணிபூராக இருந்தாலும், உத்திரப்பிரதேசமாக இருந்தாலும் இந்த அளவில் தான் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் இப்படி இருக்கையில் அடுத்த மாநிலத்தைப் பற்றி கூச்சமில்லாமல் பேசுகிறார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அதில் கூறுகிறார்.