தமிழகத்தை உலுக்கிய சுஜித் மரணம்: இறுதி அஞ்சலி செலுத்திய தலைவர்கள்

Trichy Sujith Wilson : ஆழ்துளை கிணற்றில் உயிர் இழந்த இரண்டு வயது சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தங்களது இரங்கலை வெளிபடுத்தி வருகின்றனர்.

Sujith news live updates
Sujith news live updates

Trichy Sujith Wilson news updates : 25ம் தேதி மாலை 05:30 மணி அளவில் திருச்சி மணப்பாறை அருகில் இருக்கும் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 25 ஆழத்தில் சிக்கிக் கொண்டான். தீயணைப்புத் துறையினர் அவனை மீட்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் சுஜித்தை மேலும் ஆழமான பகுதிக்கு இட்டுச் சென்றது. 88 அடியில் சிக்கிக் கொண்ட சுஜித்தை  காப்பதற்காக 27ம் தேதி காலையில் இருந்து புதிய யோசனை செயல்படுத்தப்பட்டது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 3 மீட்டர் இடைவெளியில் ரிக் இயந்திரம் கொண்டு 100 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, பக்கவட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்பது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த செய்தியை பிற மொழியில் படிக்க : வங்கம், மலையாளம், ஆங்கிலம்

இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் நேற்று வரை (28/10/2019 காலை) வெறும் 35 அடிகள் மட்டுமே தோண்டப்பட்டது. மிகக்கடினமான பாறைகளை கொண்ட பகுதி என்பதால் ரிக் இயந்திரம் அடிக்கடி பழுதடையத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாற்று வழி யோசிக்கப்பட்டு போர்வெல் போடும் இயந்திரம் மூலம் பாறைகளில் துளைகளிட்டு தகர்க்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு 10 மணி சமயத்தில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய நாற்றம் வீசத் தொடங்கவும் சுஜித் மரணமடைந்ததை உறுதி செய்தது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சியால் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் இருந்து சுரங்கம் அமைத்து சுஜித்தின் சடலத்தை மீட்டுக் கொண்டு வந்தனர். சுஜித்தின் பிரேத பரிசோதனை மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டு அவருடைய உடல் நடுக்காட்டுப்பட்டியில் இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நெஞ்சை பிழிந்த சோகம்: அதிகாலையில் சடலமாக சுஜித் மீட்பு

Live Blog

Sujith tributes : அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் தங்களின் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.


20:36 (IST)29 Oct 2019

சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது. சுஜித்தை இழந்து வாடும் பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமையை தரவேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

20:27 (IST)29 Oct 2019

புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு விபத்துகளில் மீட்க உபகரணங்கள், பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் – நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி: புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு விபத்துகளில் இருந்து மீட்க தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

19:43 (IST)29 Oct 2019

‘பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ – சுஜித்தின் தாய் கலாமேரி

சுஜித்தின் தாய் கலாமேரி: தங்களால் இயன்ற அளவிற்கு சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் கூறினார். எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

19:41 (IST)29 Oct 2019

சுஜித்தின் மரணத்தை போல் தமிழகத்தில் இனி ஒரு நிகழ்வு கூடாது – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: துயரமான சுஜித்தின் மரணம் தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும். இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் கூடாது. எஞ்சி இருக்கும் நாட்களிலாவது அதிமுக அரசு விழித்தெழ வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து மூட வேண்டும். போர்வெல் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பஞ்சாயத்து வாரியாக பராமரிக்கப்பட வேண்டும். திமுகவினரும் அந்த விபரங்களை சேகரித்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். மாநில, மாவட்ட பேரிடர் ஆணையங்கள் செயல்படுவதற்கு தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தவும், மாவட்ட பேரிடர் ஆணையங்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.

19:34 (IST)29 Oct 2019

எத்தனை கோடி கொடுத்தாலும் சுஜித்துக்கு ஈடாகாது” – பிரேமலதா விஜயகாந்த்

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பதினரை தேமுதிக பொருளாளர் பிரேமலதா சந்தித்து ஆறுதல் கூறினார். சுஜித்தின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா: 2 வயது குழந்தை சுஜித்தின் மரணம் உலகையே உலுக்கியுள்ளது. சுஜித்தின் மரணம் எல்லோருக்குமான பாடமாக அமைய வேண்டும். ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் பொறுப்போடு அதை மூட வேண்டும். எல்லா ஆழ்துளை கிணறுகளையும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை கோடி கொடுத்தாலும் சுஜித்துக்கு ஈடாகாது என்று கூறினார்.

19:12 (IST)29 Oct 2019

ஆழ்துளைக் கிணற்றில் எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும் – சுஜித்தின் தாய் கலாமேரி வேண்டுகோள்

ஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் தாய் கலாமேரி: ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது; எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.

18:38 (IST)29 Oct 2019

ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானது – முதல்வர் பழனிசாமி

இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை. மீட்பு பணிகள் குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானது. அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் – முதலமைச்சர் பழனிசாமி

18:22 (IST)29 Oct 2019

அரசு, அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “அரசு சார்பில் 10 லட்சமும் அதிமுக சார்பில் 10 லட்சமும் வழங்கப்படும். சுஜித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டில் மாயி இறைவன் எனும் 6 வயது சிறுவன், இதே போல் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். அப்போது என்ன அவர்கள் ராணுவத்தை கொண்டு வந்தார்களா? அந்த சிறுவன் இறந்துவிட்டான். அப்போது எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திமுக மீட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

18:16 (IST)29 Oct 2019

இரவு பகல் பாராமல் மீட்புப் பணி – முதல்வர்

அமைச்சர்களும், அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுஜித்தை உயிரோடு மீட்க அரசு முழு முயற்சி மேற்கொண்டது. மீட்புப் பணி தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது. ஒன்ஜிசி, என்எல்சி, ஐஐடி தொழில்நுட்ப குழு உதவியுடன் போராடினோம். – முதல்வர் பழனிசாமி

17:59 (IST)29 Oct 2019

முதல்வர் பழனிசாமி நேரில் அஞ்சலி; சுஜித் பெற்றோருக்கு ஆறுதல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித் அடக்கம் செய்யப்பட்ட நடுக்காட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, சுஜித் பெற்றோருக்கு முதல்வர் பழனிசாமி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்

17:55 (IST)29 Oct 2019

அமெரிக்காவில் ஆழ்துளை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா

அமெரிக்காவில் கடந்த 1987-ம் ஆண்டு 22 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை 58 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட அமெரிக்கர்கள், பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள்.

கிட்டத்தட்ட 45 மணி நேர போராட்டத்திற்கு மீட்கப்பட்ட ஜெசிகாவுக்கு 15 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உயிர் பிழைக்க வைத்தனர். இப்போது அந்த ஜெசிகாவுக்கு வயது 33. திருமணமாகி 2 குழந்தைகளுடன் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இங்கே முக்கியமான விஷயம் என்னவெனில், 1987க்கு பிறகு அமெரிக்காவில் வேறு எவரும் ஆழ்துளை கிணற்றில் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

ஜெசிகா மீட்கப்பட்ட போது எடுத்த படம்

17:45 (IST)29 Oct 2019

சுஜித்திற்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, சுஜித் படத்திற்கு முன்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே செல்ல மாட்டோம் என்றும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட செய்வோம் என்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

17:02 (IST)29 Oct 2019

ஆழ்துளை கிணறு அமைக்க கடைபிடிக்க வேண்டிய விதிகள்; அனுமதியின்றி அமைத்தால் தண்டனை என்ன?

ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம்.

அனுமதி பெற்ற பிறகு,

முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.

தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளை குழியை தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி கம்பி அல்லது தடுப்பு அமைத்தல் கட்டாயம்

தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணறை முறையாக மூட வேண்டும்

நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும் என்ற விதி சட்டத்தில் உள்ளது.

பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316 A பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது

16:41 (IST)29 Oct 2019

ரூ.1 லட்சம் வழங்கிய பிரேமலதா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் திருச்சியில் உள்ள நடுக்காட்டுபட்டி நேரில் சென்று குழந்தை சுஜித் மரணத்தை கண்டு வேதனை அடைந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, 1 லட்சம் ரூபாய் வழங்கினார்

16:38 (IST)29 Oct 2019

சுஜித் மறைவு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குழந்தை சுஜித் மறைவு மூலம் தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

16:22 (IST)29 Oct 2019

நடுக்காட்டுப்பட்டி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

சுஜித் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவும் நடுக்காட்டுப்பட்டி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி

16:03 (IST)29 Oct 2019

குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிடுங்கள்- ராகவா லாரன்ஸ்

குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிடுங்கள் என சுஜித்தின் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

16:01 (IST)29 Oct 2019

மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இதுவரை சுமார் 1100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தண்ணீர் வறண்ட பகுதிகளான திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள ஆட்சியர், மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது, திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருப்பின் அவற்றை கண்டுபிடித்து தெரிவிக்க 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்தார்.

16:00 (IST)29 Oct 2019

பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடி வரும் தன்னார்வலர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவர், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் பெற்று, அவற்றை சொந்த செலவில் மூடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கெஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், அதே பகுதியில் மின்சாதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். சுஜித்தின் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடித் தரப்படும் என சமூக வலைதளங்களில் நாகராஜ் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து வந்த தகவல்களை அடுத்து, 5க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று தனது சொந்த செலவில், பிவிசி மூடிகள் கொண்டு மூடி வருகிறார்.

இவரைப் போன்றே சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரத்தைச் சேர்ந்த தன்னார்வலரான புகழேந்தி என்பவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

15:42 (IST)29 Oct 2019

இறப்பில் கூட திமுக அரசியல் செய்கிறது – பிரேமலதா

இறப்பில் கூட திமுக அரசியல் செய்கிறது என்று நடுக்காட்டுப்பள்ளியில் குழந்தை சுஜித்துக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்

15:39 (IST)29 Oct 2019

புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூட முதல்வர் உத்தரவு

குழந்தை சுஜித்தின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

15:30 (IST)29 Oct 2019

மழை நீர் சேமிப்பு முறை பற்றி சந்தேகங்களுக்கு…

9445802145 – மழைநீர் சேமிப்பு முறைகள் பற்றி சந்தேகம் இருந்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்.

அதேபோல், twadboardtn.gov.in என்ற இணையதளத்திலோ, சமூக வலைதள பக்கத்திலோ விளக்கங்கள் பெறலாம் என தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும், பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

15:24 (IST)29 Oct 2019

எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது – பிரேமலதா விஜயகாந்த்

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது – சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

15:23 (IST)29 Oct 2019

கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் இரங்கல்

குழந்தை சுஜித்தின் மறைவுக்கு கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் இரங்கல்.

சுஜித்தின் மரணத்தால் மனவேதனை அடைகிறேன், இனியாவது இதுபோன்ற பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை விரைந்து மூட வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம்

15:16 (IST)29 Oct 2019

மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவு

பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். 

பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற ஆணை

14:56 (IST)29 Oct 2019

குழந்தைகளுக்காக செயல்பாடு குழுவை உருவாக்க உள்ளோம் : லதா ரஜினிகாந்த்

சுசுஜீத்தின் மரணம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி காந்த், ” சுஜீத் போன்ற குழந்தைகள் பெற்றோர்களை நம்பி தான் உள்ளனர். பெற்றோர்களுக்கும் நல்ல விழிப்புணர்வு தேவைப்படுகிறது” என்றார் . மேலும், ஜனநாயகத்தில் குழந்தைகளின் குரல்கள் மிகவும் முக்கியமானது.  குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு  செல்ல  ஒரு குழு (அமைப்பு ) உருவாக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.   

14:39 (IST)29 Oct 2019

சுஜீத்தின் ஆத்மா சாந்தியடையட்டும் – ரஜினி காந்த்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து தனது உயிரை ஈர்த்த சுஜித்துக்கு பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி காந்த் தனது இரங்கலையும் , அனுதாபத்தையும்  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், இந்த நிகழ்வு தனக்கு வேதனையை அளிக்கிறது என்றும், சுஜீத்தின் பெற்றோருக்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

14:27 (IST)29 Oct 2019

உயர்நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்:

சில நாட்களுக்கு முன்பு பேனரால் உயிர் இழந்த சுப ஸ்ரீ நிகழ்வாக இருந்தாலும் சரி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து தனது உயிரை ஈர்த்த சுஜித்  மரணக் கதையாக இருந்தாலும் சரி , உயரி பலி ஏற்பட்டால் தான் அரசு தனது கடமையை உணருமா ? என்று  அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. உயர்நீதிமன்ற  ஆழ்துளை கிணறு தொடர்பான உத்தரவை ஏன் நடைமுறை படுத்தவைல்லை ? அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை ? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளது. 

இந்த கேள்விகளுக்கெல்லாம் வரும்  நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

13:35 (IST)29 Oct 2019

3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன

மூடப்படாத ஆழ்துளை கிணற்றால் சுஜித் என்கிற குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்  மகேஸ்வரி அறிவித்துள்ளார்.  மேலும், போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத , மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்தால்  9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தரும் ஏற்பாடுகளையும்  செய்துள்ளார்.  

13:25 (IST)29 Oct 2019

ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை :

ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தையை  மீட்கும் புது  கருவி கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.ஐந்து லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். செயல்படக்கூடிய தீர்வோடு வரும் எவருக்கும் / ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும்  வெகுமதி வழங்கப்படும்.  

12:46 (IST)29 Oct 2019

சுஜித்தின் பெற்றோருக்கு நிதி வழங்கிய முக ஸ்டாலின்

சுஜித்தை இழந்து வாடிவரும் பெற்றோர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை முக ஸ்டாலின் திமுக சார்பில் வழங்கினார்.

12:39 (IST)29 Oct 2019

சுஜித்தின் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறிய தலைவர்கள்

கே.என்.நேரு, திருநாவுக்கரசர், திருச்சி சிவா, ஜோதிமணி உள்ளிட்டோரும் நேரில் சென்று சுஜித்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளித்தனர்.

12:34 (IST)29 Oct 2019

மீட்புப் பணியை பொறுத்தவரை அரசு மெத்தனமாக செயல்பட்டது – முக ஸ்டாலின் குற்றம்

36 அடி ஆழத்தில் குழந்தை இருந்த போதே மீட்கப்பட்டிருக்க வேண்டும். பேரிடர் மீட்புப் படையை உடனடியாக அழைக்காமல் போனது ஏன் என கேள்வி. இனிமேலாவது இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் முக ஸ்டாலின் பேச்சு

11:50 (IST)29 Oct 2019

முக ஸ்டாலின் அஞ்சலி

சுஜித்தின் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். 

11:39 (IST)29 Oct 2019

சுஜித்தின் பெற்றோர்களை சந்திக்க நடுகாட்டுப்பட்டி செல்கிறார் முதல்வர்

இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நடுக்காட்டுப்பட்டியில் இருக்கும் சுஜித் வில்சனின் பெற்றோரை சந்திக்க இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

11:35 (IST)29 Oct 2019

எஸ்.பி. வேலுமணி ட்வீட்

இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

11:29 (IST)29 Oct 2019

தவறாக பரப்பப்படும் சுஜித் புகைப்படங்கள்

சுஜித்தின் புகைப்படங்கள் என்று வேறு ஒரு குழந்தையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பட்டு வருகிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

10:36 (IST)29 Oct 2019

முதல்வர் உத்தரவு

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கின்ற விவகாரத்தில் விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து அறிவித்துள்ளார் முதல்வர்.

10:06 (IST)29 Oct 2019

விஜயகாந்த் வேதனை

குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த இரங்கல்

10:04 (IST)29 Oct 2019

சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மனவேதனை அளிக்கிறது – முதல்வர்

ஆழ்துளாஇ கிணறுகள் தொடர்பான வழிமுறைகளை சரியாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவு

10:02 (IST)29 Oct 2019

நடைமுறைகள் பின்பற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் பின்பற்ற உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

09:37 (IST)29 Oct 2019

மன்னித்துவிடு மகனே – அமைச்சர் விஜயபாஸ்கர்

சுஜித்தை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மன்னித்துவிடு மகனே என்று ட்விட்டரில் விஜயபாஸ்கர் வெளியிட்ட ட்வீட்

09:35 (IST)29 Oct 2019

Sorry Sujith – இறுதி அஞ்சலி செலுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த ஐந்து நாட்களாக நடுகாட்டுப்பட்டியை விட்டு நகராமல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கேயே இருந்தார். காலையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பிறகு கொண்டு வரப்பட்ட சுஜித்தின் உடலுக்கு மரியாதை செலுத்திய காட்சி. 

09:05 (IST)29 Oct 2019

நடிகர் விமல் நேரில் அஞ்சலி

குழந்தை சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட பாத்திமாபுதூர் கல்லறையில் முத்தரன், நடிகர் விமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

08:48 (IST)29 Oct 2019

அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாஜகவின் எச்.ராஜா, நடிகர்கள் விவேக், சேரன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் தங்களின் இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அது தொடர்பான முழுமையான தொகுப்பினை படிக்க

08:42 (IST)29 Oct 2019

பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம்

நடுக்காட்டுப்பட்டியை அடுத்து அமைந்திருக்கும் பாத்திமாபுதூர் கல்லறையில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். 

08:28 (IST)29 Oct 2019

நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கின

சுஜித் வில்சனின் உடலுக்கு பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த நிலையில் தற்போது நல்லடக்கத்திற்காக கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது சுஜித்தின் உடல். 

08:16 (IST)29 Oct 2019

கிறித்துவ முறைப்படி இறுதிச் சடங்கு

சுஜித்தின் உடலுக்கு கிறித்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. தேவாலய கல்லறைத் தோட்டத்தில் குழி தோண்டும் பணி தீவிரம்

08:09 (IST)29 Oct 2019

ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவை கொண்டு இன்று காலை மூடப்பட்டது. அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. அதனை அப்புறப்படுத்திய பிறகு அந்த சுரங்கமும் மூடப்படும்.

Trichy Sujith Wilson : முதலில் கொண்டு வரப்பட்ட ரிக் இயந்திரம் மூலம் 25 அடி வரை தோண்டப்பட்டது. அதன் பின்பு கொண்டு வரப்பட்ட ரிக் இயந்திரம் மூலம் வெறும் 10  அடி மட்டுமே தோண்டப்பட்டது. தொடர்ந்து அதன் கட்டிங் ப்ளேடுகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து அடிக்கடி மீட்புப் பணி தாமதமடையத் துவங்கியது. மேலும் நடுக்காட்டுப்பட்டியில் தொடர்ந்து பெய்த மழையும் பணிகளை தொய்வுற வைத்தது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் மீட்புப் பணிகள் முடியும் வரை அங்கேயே இருந்தனர். எம்.பி. ஜோதிமணி, எம்.பி. தொல்திருமாவளன், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஏற்கனவே அங்கு வந்து சுஜித்தின் பெற்றோர்கள் கலாமேரிக்கும் ஆரோக்கியராஜூக்கும் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மீட்பு பணி இடத்தில் பாறை அமைப்புகள், முக்கிய பிரச்னைகள்: நில அமைப்பியல் பேராசிரியர் வி.சுப்பிரமணியன்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trichy sujith wilson news live updates decomposed body retrieved from abandoned borewell at nadukattupatti

Next Story
மீட்பு பணி இடத்தில் பாறை அமைப்புகள், முக்கிய பிரச்னைகள்: நில அமைப்பியல் பேராசிரியர் வி.சுப்பிரமணியன்Trichy Nadukattupatti Sujith Wilson Rescue operation live updates, Sujith photos, Pray for sujith, Sujith Manapparai, Sujith images,save surjith, surjith, சுர்ஜித், சுர்ஜித் மீட்புபணி, Sujith lastest news, Sujith latest news, Sujith Latest news, Sujith Rescue, சுஜித், திருச்சி செய்திகள், இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தமிழ் செய்திகள், சுஜித், சுஜித் திருச்சி, நடுக்காட்டுப்பட்டி, முக்கிய செய்திகள், Trichy news, Tamil News, Tamil Nadu news, Trichy Nadukatuupatti, Sujith Wilson, Rescue live,manapparai rock structure
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com