திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சற்றுமுன் அளித்த பேட்டியில், "சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும், நாளை மதியம் முதல் நீக்கப்பட்ட காட்சிகளுடன் படம் திரையிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தில் அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிகளுக்கும், படத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மியின் கேரக்டர் பெயர் 'கோமளவள்ளி' என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதுரை, கோவை, சென்னை என பல இடங்களில் சர்கார் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மதுரையில் மதியத்துக்கு மேல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், இன்று மாலை சென்னை வடபழனியில் உள்ள காசி தியேட்டரின் முன்பு அமைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரம்மாண்டமான பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. சில பிரம்மாண்ட கட் அவுட்கள் அடித்து உடைக்கப்பட்டன.
ஆல்பர்ட் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த கட் அவுட்கள் மற்றும் பேனர்களையும் அதிமுகவினர் அடித்து உடைத்தனர்.
அதுமட்டுமின்றி, சென்னையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பல்வேறு திரையரங்குகளை முற்றுகையிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இன்று மாலை அளித்துள்ள பேட்டியில், "சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும். நாளை மதியம் முதல் நீக்கப்பட்ட காட்சிகளுடன் படம் திரையிடப்படும். படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவே தணிக்கைக் குழுவின் சம்மதத்துடன் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்.
இதுகுறித்து அமைச்சர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடமும் நாங்கள் உறுதி அளித்துள்ளோம். தயாரிப்பு நிர்வாகமும் காட்சி நீக்கத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டது. ஆனால், விஜய்யிடமோ, முருகதாஸிடமோ இதுகுறித்து நான் பேசவில்லை. நேரடியாக தயாரிப்பு தரப்பிடமே பேசி முடிவை வாங்கிவிட்டோம்.
இனி இது தொடர்பாக எந்தப் பிரச்சனையும் வராது என நம்புகிறோம். இதற்கு முன் சில படங்களுக்கும் இப்படி பிரச்சனை வந்த போது சில காட்சிகளை நீக்கி வெற்றிகரமாக திரையிட்டோம். ஆகையால், ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். நாளை மதிய காட்சியிலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் படம் திரையிடப்படும். இதனால், கதையின் ஓட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், எந்தெந்த காட்சிகள் நீக்கப்படும் என்பது குறித்து இனிமேல் தான் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.