கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் வேலைகளில் உலகமே பிஸியாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் உணவுத் துறை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. அந்த வகையில் மதுரையில் உணவகத்தில் தயாரிக்கப்படும் மாஸ்க் பரோட்டாக்கள் பெருமளவு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
காதல் வசனம்… ஆடியோவில் சிக்கிய சென்னை மாநகராட்சிப் பொறியாளர்
பரோட்டா பிரியர்களிடைடே COVID-19 விழிப்புணர்வை ஏற்படுத்த, மதுரையில் உள்ள மிகப்பெரிய உணவக சங்கிலிகளில் இந்த மாஸ்க் பரோட்டா தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.
மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தில் தயாரிக்கப்படும் இந்த பரோட்டாக்கள் குறித்து, அதன் உரிமையாளர் கே.எல்.குமார் கூறுகையில், ”இப்படியொரு பரோட்டாவைத் தயாரிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை காலையில் தான் எனக்குத் தோன்றியது. உடனே மதியமே அதற்கு ஆயத்தமாகி மாஸ்க் பரோட்டாவை செய்துவிட்டோம். அதற்குப் பெரிதாக மெனக்கெடல் ஏதும் தேவைப்படவில்லை. எங்களின் இலக்கு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கலாம் என்பதை உணர்த்துவதாகவே இருந்தது.
மதுரையில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்ததே. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அன்றாடம் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜூன்-8 முதல் ஜூன்-23 காலகட்டத்தில் அமலில் இருந்த ஊரடங்குக்குப் பின்னர் உணவகங்கள் இயங்கத் தொடங்கின. அப்போது எங்கள் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் அணியச் சொல்லி வற்புறுத்தினோம். மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு நாங்களே இலவசமாக வழங்கினோம். தற்போதும் உணவகங்களுக்கு வரும் ஹோம் டெலிவரி ஊழியர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்குகிறோம்” என்றார்.
டெம்பிள் சிட்டி கடையின் பரோட்டா மாஸ்டர் எஸ்.சதீஷ், “வீச்சு பரோட்டா செய்முறையிலேயே மாஸ்க் பரோட்டா செய்தோம். பரோட்டா மாவில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. நாங்கள் பரோட்டாவை மடிக்கும் விதத்தில் மட்டுமே சில மாறுதல் செய்தோம். முதல் முயற்சியிலேயே சிறப்பாக வந்துவிட்டது” என்றார்.
காலையில் கருவேப்பிலை ஜூஸ்: அட, இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே!
மாஸ்க் பரோட்டா பற்றி அறிந்ததுமே மதுரைவாசிகள் ஹோட்டலுக்கு வந்து பார்சல் வாங்கிச் செல்வதும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதும் அதிகரித்துள்ளது. 2 மாஸ்க் பரோட்டாக்கள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”