அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முழுவதும் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி!

மேலும், விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள 100 ஏக்கர் நிலமும், அவரது குவாரியையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது, அங்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுதவிர, புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ5.13 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, 89 கோடி ரூபாய் பணம் யார் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள  கல் குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரை நேரில் ஆஜராக, வருமானவரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல, விஜயபாஸ்கரின் தம்பியிடமும், வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்தச் சூழ்நிலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முழுவதையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளது. மேலும், விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள 100 ஏக்கர் நிலமும், அவரது குவாரியையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அமைச்சரின் நிலத்தை முடக்க புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த 100 ஏக்கர் நிலத்தில் பூமிக்கு கீழே, விலையுயர்ந்த கற்கள் இருப்பதாகவும், அதனால் தான் விஜயபாஸ்கர் அந்த இடங்களை வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

Web Title:

Healthminister vijayabaskar assets seized by income tax

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close