Tamilrockers website: தமிழ்ராக்கர்ஸ் என்கிற ஒற்றைச் சொல், சினிமா உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வில்லன்களை சினிமாவில் உருட்டி புரட்டும் நிழல் கதாநாயகனால், பைரசி வில்லன் தமிழ் ராக்கர்ஸை மட்டும் எதுவும் செய்துவிட முடியவில்லை.
தமிழ் ராக்கர்ஸ், சின்ன நடிகர்-பெரிய நடிகர் என்றும் பார்ப்பதில்லை. ரஜினிகாந்த், விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களின் படங்களையும் சில சமயம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் முன்பே வெளியிட்டு தெறிக்க விட்டுவிடுகிறது. இதனால் படத்தை வெளியிடும் முன்பே நீதிமன்றத்திற்கு சென்று பைரசி இணையதளங்களுக்கு தடை கேட்கவேண்டிய நிலையில் படத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற விஷால், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களுக்கு எதிராக வாள் சுழற்றினார். அவரே நேரடியாக சில இடங்களில் திருட்டு விசிடி.களை பிடிக்க முடிந்ததே தவிர, பைரசி இணையதளங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
To Read More: கடைசியில் விக்ரமுக்கும் இந்த நிலையா? என்ன செய்ய போகிறார் விஷால்?
தமிழ் ராக்கர்ஸ் ஆகப் பெரிய வில்லனாக எப்படி கோலோச்சுகிறது? எப்படி புதுப்படங்களை திருடுகிறது? என்பது குறித்தும் ஒரு பார்வை:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்கள் பலரது படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் முன்பே அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா என உலகின் பல பகுதிகளில் வெளியாகின்றன. வெளிநாட்டு வினியோக உரிமை என்பது படத் தயாரிப்பாளரின் முக்கிய வருமானத்தில் ஒன்று! ஆனால் அப்படி வெளிநாட்டில் பகல்-இரவு நேர வித்தியாசம் காரணமாக சில மணி நேரங்கள் முன்கூட்டியே வெளியாகிற படங்களைத்தான் திருடி அடுத்த சில மணி நேரங்களில் வி.சி.டி.யாகவும், இணையதளங்களிலும் வெளியிட்டு விடுகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மூக்கணாங்கயிறு போடவும், திருட்டு விசிடி-யை ஒழிக்கவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘ஆன்டி பைரசி செல்’ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பினர் அண்மையில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
கோயம்புத்தூரில் தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர்கள் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது. ஆனாலும் சர்வதேச அளவில் இயங்கும் இந்த இணையதளத்தை முழுமையாக முடக்க முடியவில்லை. அப்படியே முடக்கினாலும், வேறு வேறு பெயர்களில் புத்துயிர் பெற்று விடுகிறது.
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் வேறு சில வகைகளிலும் படங்களை திருடுகின்றனர். ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் சில தியேட்டர்களில் ரிவியூ காட்சிகள் திரையிடப்படும். அந்தத் தியேட்டர்களின் ஊழியர்களையோ, அல்லது சினிமாத்துறை சார்ந்த ஏஜெண்டுகள் சிலரையோ கைக்குள் போட்டுக்கொண்டு படத்தை முழுமையாக பைரசி கும்பல் ‘காபி’ செய்துவிடுகிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பல ஸ்கிரீன்களில் படத்தை திரையிடுவார்கள். அப்போது ஊழியர்கள் மூலமாக லேப் டாப்பில் பதிவு செய்வதும் நடக்கிறது. அதாவது, ஒரு லிங்கை புரஜெக்டருக்கும், மற்றொரு லிங்கை லேப் டாப்பிற்கும் கொடுத்து விடுவார்கள். அங்கு பல ஸ்கிரீன்கள் காட்டப்படுவதால் எந்த சந்தேகமும் வராது. எனவே பைரசி கும்பலுக்கு சுலபமாகிறது.
சினிமா திருட்டில் மூன்றாவது விதமாக கேமரா அல்லது செல்போன் வழியாக பதிவு செய்வதும் நடக்கிறது. பெரிய நகரங்களில் இது நடப்பதில்லை. சினிமாப் படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதும், பார்ப்பதும் இந்தியாவில்தான் அதிகம்! அண்மையில் வெளியான சீமராஜா, செக்கச் சிவந்த வானம் படங்களும்கூட தமிழ் ராக்கர்ஸ் பிடிக்குத் தப்பவில்லை.
தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி இணையதளங்களுக்கு என்று விளம்பரதாரர்களும் இருக்கிறார்கள். Propeller Ads Media, Dynamic Oxygen, Exit Junction, Blacklabelads, popAds, popMyAds, BuzzBizz போன்றவை தமிழ்ராக்கர்ஸில் விளம்பரம் செய்து பெரும் வருமானத்தை ஊட்டுகிறார்கள். கூகுள் இதுபோன்ற திருட்டுகளை ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. TFPC ANTI PIRACY CELL வந்த பின்னர் திரைப்பட திருட்டு சற்றே குறைந்திருக்கிறது. ஆனாலும் இந்த பைரசி வில்லனை முழுமையாக ஒழிக்க முடியாமல் சினிமாத் துறை திணறி வருகிறது என்பதுதான் நிஜம்!
தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளங்கள் படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரை மட்டும் பாதிக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கின்றன. சினிமாத் துறையினரும் அரசும் இன்னும் விரிவான ஏற்பாடுகளை செய்தால்தான் பைரசியை தடுக்க முடியும்.