FIFA World Cup 2018: 2002 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா செனகல்?

FIFA World Cup 2018: செனகல் கால்பந்து அணி, ஒரு பார்வை

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

தொடக்க போட்டியில் ரஷ்ய அணி, சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது. ஆனால், அதன்பிறகு பெரிய அணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படி சிறப்பாக விளையாடவில்லை. அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் ஆடிய ஆட்டங்கள் டிராவாக, உலக சாம்பியன் ஜெர்மனியோ மெக்சிகோவிடம் தோற்றே போனது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடருக்காக இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். பல கால்பந்து ரசிகர்கள் கால்பந்து அணியின் கொடி அல்லது வீரர்களின் புகைப்படங்களை வீட்டின் சுவரில் வண்ணமடித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: இப்படி விளையாடினால் நாடு திரும்ப முடியாது! – எச்சரிக்கும் மாரடோனா

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 28 வயதான கிளிஃபின் பிரான்சிஸ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் தீவிர ரசிகரான இவர், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண வேண்டும் என எண்ணினார். இதையடுத்து, கேரளாவிலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்ற பிரான்சிஸ், அங்கிருந்து ஈரான் வழியாக கப்பலில் ரஷியா சென்றடைந்தார். பின், அங்கிருந்து தனது சைக்கிளில் 600 கி.மீ. பயணம் செய்து போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல உள்ளார்.

அங்கு நடக்கும் போட்டியை நேரில் பார்த்து விட்டு, மெஸ்சியிடன் தனது சைக்கிளில் ஆட்டோகிராஃப் வாங்குவதே கனவு என்கிறார் பிரான்சிஸ். இப்படி வெறித்தனமாக கால்பந்து மோகம் கொண்டிருக்கும் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று செனகல் அணியைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க: ஃபிபா உலகக் கோப்பை 2018 – இன்றைய போட்டிகள் விவரம்

ஃபிரான்ஸிடம் அடிமைப்பட்டிருந்த செனகல் அணி, 1960ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி விடுதலையானது. இதையடுத்து செனகல் கால்பந்து கூட்டமைப்பு அதே ஆண்டு தொடங்கப்பட்டது. 1961ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி தனது முதல் அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டியில் செனகல் ஆடியது. இதன்பின், 1962ம் ஆண்டு ஃபிபாவில் செனகல் கால்பந்து கூட்டமைப்பு உறுப்பினரானது.

உலகக் கோப்பையை பொறுத்தவரை, 1966ம் ஆண்டு வரை உலகக் கோப்பை தகுதித் சுற்றுகளில் கலந்து கொள்ளாத செனகல், 1970 முதல் 1998 வரை (1990 தவிர) தகுதிச் சுற்றுகளில் பங்கேற்றும் தோல்வி அடைந்ததால், உலகக் கோப்பைகளில் பங்கேற்க முடியவில்லை.

அதன்பின், 2002ம் ஆண்டு முதன் முதலாக உலகக் கோப்பை தொடரில் விளையாட செனகல் தகுதிப் பெற்றது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், பங்கேற்ற முதன் தொடரின் முதல் போட்டியிலேயே உலக சாம்பியன் ஃபிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. கால்பந்து உலகமே அன்று ஸ்தம்பித்தது. அதுமட்டுமின்றி, டென்மார்க் மற்றும் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் டிரா செய்த செனகல், ஸ்வீடன் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி கலக்கியது. ஆனால், துருக்கி அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் செனகல் தோற்றது.

மேலும் படிக்க – ஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றை போட்டிகளின் முடிவுகள்

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி, உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முன்னேறியது அதுவே இரண்டாவது நிகழ்வாகும். 1990ம் ஆண்டு கேமரூன் அணியும், 2002ல் செனகல் அணியும், 2010ல் கானா அணியும் காலிறுதிக்கு முன்னேறி இருந்தது.

ஆனால், 2002க்கு பிறகு, செனகல் அணி மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம், 2018 உலகக் கோப்பைக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தகுதிப் பெற்றுள்ளது செனகல் அணி.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள செனகல் அணி வீரர்கள் விவரம்:

கோல் கீப்பர்கள்:

அப்தோலயே டயாலோ, காதிம் என்’டயே, ஆல்ஃப்ரெட் கோமிஸ்.

டிஃபென்டர்:

அடாமா எம்பெங், கலிடோ கெளிபலி, காரா எம்போட்ஜி, சலிஃப் சேன், யோசொஃப் சபாலி, லேமின் கஸாமா, மௌஸா வேக்.

மிட்ஃபீல்டர்:

இட்ரிஸா குயே, செய்கோ கௌயாதே (கேப்டன்), செய்க் என’டோய், ஆல்ஃபிரட் என்’டயே, பேடோ என்டயே.

ஃபார்வேர்ட்ஸ்:

மௌஸா சௌ, மேம் பிரம் டயோஃப், சாடியோ மேன், மௌஸா கோணடே, டயஃப்ரா சாகோ, இஸ்மைலா சர், எம்’பயே, நியாங், கெய்டா பல்டே.

தலைமை பயிற்சியாளர்: ஆலியோ சிசே.

‘H’ பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் அணி ஜப்பான், போலந்து, கொலம்பியாவுடன் லீக் சுற்றில் மோதுகிறது.

ஜூன் 19ல்(இன்று) போலந்து அணியுடன் மோதும் செனகல், ஜூன் 24ல் ஜப்பான் அணியுடனும், ஜூன் 28ல் கொலம்பியா அணியுடனும் மோதுகிறது.

சாடியோ மேன், கலிடோ கெளிபலி, டயஃப்ரா சாகோ ஆகியோர் செனகல் அணியின் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக, லிவர்பூல் அணிக்காக விளையாடியுள்ள சாடியோ மேனை நம்பியே செனகல் அணி உள்ளது.

ஜப்பானுடன் வெற்றி, மற்ற இரண்டு அணிகளுடன் டிரா செய்தாலே, 2002லே நடந்ததுபோல் மீண்டும் கால் இறுதிக்கு நுழையும் வாய்ப்பு செனகலுக்கு கிடைக்கலாம்.

2002ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய செனகல் அணியால், இம்முறையும் அதைப் போன்றதொரு impact ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதேசமயம், அந்த அணியின் சமீபத்திய செயல்பாடுகள், அதாவது இந்தாண்டு அந்த அணி ஆடிய ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் பொழுது எளிதில் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இந்தாண்டு தொடக்கத்தில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய செனகல், 1-1 என டிரா செய்தது. அதன்பின் போஸின் மற்றும் லுக்ஸம்பெர்க் அணியுடன் மீண்டும் டிரா செய்த செனகல், குரோஷியாவுடன் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இருப்பினும் உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக விளையாடிய தென் கொரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 2-0 என செனகல் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றி நிச்சயம் அந்த அணிக்கு ஒரு பூஸ்ட் தான் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையோடு இன்றைய போட்டியில் போலந்து அணிக்கு எதிராக களம் காணுகிறது செனகல்.

×Close
×Close