Beetroot and Carrot Soup in tamil: உலகெங்கிலும் உள்ள ஆரோக்கிய பிரியர்களால் பீட்ரூட் மற்றும் கேரட் சூப் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த சூப் ரெசிபி ஒரு இனிப்பு-புளிப்பு கலவையாகும் மற்றும் இது மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இவற்றை சீக்கிரமாக எளிதில் தயார் செய்து விடலாம்.
தவிர எளிதான செய்முறை கொண்ட இந்த பீட்ரூட் – கேரட் சூப்பை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடலாம். இவற்றை முக்கிய நிகழ்வுகளின் போதும், வீட்டு விஷேசங்களின் போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கலாம். பீட்ரூட்டை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், இயற்கையான சுவையையும் கொண்ட இந்த சூப் ரெசிபியை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

பீட்ரூட் – கேரட் சூப் தயார் செய்யத் தேவையான பொருட்கள்
கேரட் – 1/4 கிலோ
வெங்காயம் – 2
பீட்ரூட் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
காய்கறி சத்து நீர் – 7 கப்
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு
பீட்ரூட் – கேரட் சூப் செய்முறை
முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை சுத்தம் செய்து, அவற்றின் தோல்களை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தொடர்ந்து இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
நாம் சேர்த்துள்ள வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி, பீட்ரூட் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும்.
இவற்றுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
பின்னர் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இப்போது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்தால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் – கேரட் சூப் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“