Aloe Vera benefits in tamil: பொதுவாக ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் அதிகமாக காணப்படும் ஒரு தாவரமாக கற்றாழை உள்ளது. இவற்றில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன.
சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கவும், தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கவும் இவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், கற்றாழையை பொலிவான சருமம் பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் உபயோகிக்கலாம்.
கற்றாழை தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வல்லதாக உள்ளது. வெட்டுக்கள், சிராய்ப்புக்களை குணப்படுத்தவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
தவிர, இவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் சாறு பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கற்றாழையில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சுவையான மோர் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
கற்றாழை மோர் செய்யத் தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர் - அரை கப்
கற்றாழை - 4 சிறு துண்டுகள்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காய தூள் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
கற்றாழை மோர் சிம்பிள் செய்முறை
முதலில் கொத்தமல்லி தழைகளை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு, கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நீரில் இட்டு, குறைந்தது பத்து முறை கழுவிக்கொள்ளவும். நீங்கள் முறையாக கழுவவில்லை என்றால் அவை கசக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.
பின்னர், ஒரு மிக்ஸி எடுத்து அதில் இஞ்சித்துண்டு அரைக்கவும். பின்னர் கற்றாழைத்துண்டுகளையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அதே மிக்சியில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.
இப்படி நன்றாக அரைத்தவற்றை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான கற்றாழை மோர் தயார். அவற்றை நீங்கள் பருகி மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.