Goji berry Benefits in tamil: இத்தனை ஆண்டுகளாக, பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் பார்வையை மேம்படுத்த உதவுகின்றன என்ற உண்மையை கருத்தில் கொண்டு, கேரட் மற்றும் பிற பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருகிறோம். ஆனால், வயது தொடர்பான பார்வை இழப்பைப் பாதுகாப்பதில் கோஜி பெர்ரி உதவியாக இருக்கும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றாக உள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, உலர்ந்த கோஜி பெர்ரி ஆரோக்கியமான நடுத்தர வயதுடையவர்களில் வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் அல்லது ஏஎம்டியின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோஜி பெர்ரி என்றால் என்ன?
கோஜி பெர்ரி என்பது வடமேற்கு சீனாவில் காணப்படும் இரண்டு வகையான புதர் செடிகளின் (லைசியம் சினென்ஸ் மற்றும் லைசியம் பார்பரம் ஆகியவற்றின்) பழமாகும். இந்த உலர்ந்த கோஜி பெர்ரிகள் சீன சூப்களில் ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் தயார் செய்யப்படும் மூலிகை தேநீர் அங்கு பிரபலமாக உள்ளது.

உலர் திராட்சையை போன்று உள்ள இந்த பழத்தை அந்த மக்கள் சிற்றுண்டியாகவும் உண்கின்றனர். சீன மருத்துவத்தில், கோஜி பெர்ரிகளில் “கண்களை ஒளிரச் செய்யும்” குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோஜி பெர்ரிகளில் உள்ள ஜியாக்சாந்தின் வடிவமும் அதிக உயிர் கிடைக்கும் வடிவமாகும். இது செரிமான அமைப்பில் உடனடியாக உறிஞ்சப்படுகிறது, எனவே உடல் அதை நன்றாக பயன்படுத்தலாம்.
ஆய்வுகள் என்ன கூறுவது என்ன?
நியூட்ரியண்ட்ஸ் ஜர்னலில்’ வெளியிடப்பட்ட ஆய்வில், உலர்ந்த கோஜி பெர்ரிகளை சிறிய அளவில் உட்கொள்வது, ஆரோக்கியமான நடுத்தர வயதினருக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (சிதைவு) (AMD – ஏஎம்டி) அல்லது ஏஎம்டியின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவும் என்று கூறுகிறது.
வயதானவர்களின் பார்வை இழப்புக்கு ஏஎம்டி முக்கிய காரணமாகும், மேலும் அமெரிக்காவில் 11 மில்லியனுக்கும் அதிகமானவர்களையும் உலகளவில் 170 மில்லியனையும் பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. “ஏஎம்டி உங்கள் மையப் பார்வையைப் பாதிக்கிறது, மேலும் உங்கள் முகங்களைப் படிக்கும் அல்லது அடையாளம் காணும் திறனைப் பாதிக்கலாம்” என்று ஆய்வின் இணை ஆசிரியரும் கண் மருத்துவம் மற்றும் பார்வை அறிவியல் துறையின் இணைப் பேராசிரியருமான க்ளென் யியு கூறியுள்ளார்.

ஆய்வு முடிவுகள்
45 முதல் 65 வயதுடைய 13 ஆரோக்கியமான பங்கேற்பாளர்கள் 28 கிராம் (சுமார் ஒரு அவுன்ஸ் அல்லது ஒரு கைப்பிடி) கோஜி பெர்ரிகளை வாரத்திற்கு ஐந்து முறை 90 நாட்களுக்கு உட்கொண்டது அவர்களின் கண்களில் பாதுகாப்பு நிறமிகளின் அடர்த்தியை அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதற்கு நேர்மாறாக, அதே காலகட்டத்தில் கண் ஆரோக்கியத்திற்கான வணிக ரீதியான துணையை உட்கொண்ட 14 ஆய்வில் பங்கேற்பாளர்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை.
கோஜி பெர்ரி, லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவற்றை சாப்பிட்ட குழுவில் அதிகரித்த நிறமிகள், தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டி, ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்குகின்றன. இவை இரண்டும் வயதான காலத்தில் கண்களைப் பாதுகாக்க உதவுகின்றன.

“லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உங்கள் கண்களுக்கு சன்ஸ்கிரீன் போன்றவை. உங்கள் விழித்திரையில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் அதிகமாக இருப்பதால், உங்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளது. சாதாரண ஆரோக்கியமான கண்களில் கூட, இந்த ஆப்டிகல் நிறமிகளை தினசரி சிறிய அளவிலான கோஜி பெர்ரிகள் உண்பதன் மூலம் அதிகரிக்க முடியும் என்று எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது,” என ஊட்டச்சத்து உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற சியாங் லி கூறியுள்ளார்.
வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD – ஏஎம்டி) இன் இடைநிலை நிலைகளுக்கான தற்போதைய சிகிச்சையானது வைட்டமின்கள் C, E, துத்தநாகம், தாமிரம் மற்றும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவற்றைக் கொண்ட வயது தொடர்பான கண் நோய் ஆய்வுகள் (AREDS) எனப்படும் சிறப்பு உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகிறது.

ஏஎம்டியின் ஆரம்ப கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த சிகிச்சையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஏஎம்டியின் காரணம் சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது.
மரபணு அபாயங்கள், வயது தொடர்பான மாற்றங்கள் மற்றும் புகைபிடித்தல், உணவுமுறை மற்றும் சூரிய ஒளி போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையை உள்ளடக்கியது. ஏஎம்டியின் ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் இல்லை என்றாலும், வழக்கமான விரிவான கண் பரிசோதனையின் போது மருத்துவர்கள் ஏஎம்டி மற்றும் பிற கண் பிரச்சனைகளைக் கண்டறிய முடியும்.
இயற்கையான உணவு ஆதாரமான கோஜி பெர்ரி, அதிக அளவிலான ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதைத் தாண்டி ஆரோக்கியமான பங்கேற்பாளர்களின் மாகுலர் நிறமிகளை மேம்படுத்த முடியும் என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“