Rasam Recipe Tamil News: நம்முடைய அன்றாட உணவுகளுடன் ரசம் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அற்புத ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாமல் விரட்டி அடிக்கவும் உதவுகிறது.
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது. பூண்டுகள் செரிமானத்திற்கு உதவுகிறது.
இப்படி ஏராளமான பயன்களை கொண்டுள்ள ரசத்தை எப்படி தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

ரசம் ரெசிபி தயார் செய்யத் தேவையான பொருட்கள்
தக்காளி – 1 (பெரியது)
பூண்டு பற்கள் – 10
புளி – எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
கறிவேப்பிலை

தாளிக்க…
எண்ணெய்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
ரசம் சிம்பிள் செய்முறை
ரசம் தயார் செய்ய முதலில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நன்றாக ஊறவைத்துக்கொள்ளவும். இவை 10 நிமிடங்களுக்கு நன்றாக உறிய பின்னர், அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும்.
இப்போது, மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு தக்காளி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, சீரகம், மிளகு, பூண்டு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை எடுத்து மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து இவற்றை முன்னர் பிசைந்து வைத்துள்ள தக்காளி கலவையுடன் சேர்க்கவும். இதன்பின்னர், அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
தொடர்ந்து கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளித் தண்ணீரில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பு தயார் செய்யவும்.
பிறகு, கரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மிளகு, சீரக விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவற்றின் பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், நீங்கள் புளித்தண்ணீரை இறுதியாக சேர்க்கவும்.
பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சுவையான ரசம் தயாராக இருக்கும். இவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“