Instant Ragi Koozh in tamil: கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகி உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கிய தானியமாகும். இவற்றில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக இருக்கிறது.
ரத்தச்சோகை மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள மக்களுக்கு இவை ஒரு அற்புதமான மருந்து. பாலூட்டும் தாய்மார்கள் கேழ்வரகு கூழ் பருகி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாகி புத்துணர்ச்சியை அனுபவவிக்கலாம்.
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேழ்வரகில் குழந்தைகளும் சாப்பிடுற மாதிரியான இன்ஸ்டன்ட் மற்றும் சத்தான கேழ்வரகு கூழ் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
(2 நபர்களுக்கு ஏற்ப)
ராகி மாவு - 10 ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப
கூடுதல் சுவைக்கு:
தயிர் - 4 டீஸ்பூன்
கேரட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - ½
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இன்ஸ்டன்ட் ராகி கூழ் சிம்பிள் டிப்ஸ்:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
இதற்கிடையில் ராகி அல்லது கேப்பை மாவை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
இப்போது கொதித்து வரும் தண்ணீரில் அவற்றை சேர்த்து கரண்டி கொண்டு கிளற ஆரம்பிக்கவும்.
நாம் சேர்த்த மாவு பால் போன்று பொங்கி வரும். இந்த நேரத்தில் அதிக சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.
10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்த பிறகு, கேப்பை மாவு நல்ல வாசனை வரும். அப்போது நாம் அடுப்பை அனைத்து கொள்ளலாம்.
தயாரான கேழ்வரகு கூழை நாம் அப்படியே ஆற வைத்து பருகலாம்.
அவற்றுக்கு கூடுதல் சுவை கொடுக்க நாம் சில பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.
கூடுதல் சுவைக்கு என நாம் எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். அவற்றை சேர்க்கும்போது நன்றாக கிளறிக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு கூழ் தயார். அவற்றை ஒரு டம்ளரில் பரிமாறி சுவைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.