Kadalai Mittai Recipe benefits in tamil: குளிர்கால மாதத்தில் பயணித்து வரும் நம்மில் பலரும் விவாதிக்கும் ஹாட் டாபிக்குகளில் ‘குளிர்கால சிற்றுண்டிகள் அல்லது ஸ்நாக்ஸ்கள்’ ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், இந்தக் குளிரை தாங்கும், நமது உடலுக்கு தேவையான வெப்பநிலையைத் தரக்கூடிய சூடான உணவுகள் எண்ணற்றவை உள்ளன. இதில் வேர்க்கடலை மற்றும் வெல்லம் முக்கிய இடம் பிடிக்கிறது.
நாடு முழுதும் உள்ள மக்கள் சுவைத்து உண்ணும் இந்த கலவையில், மைக்ரோ மினரல்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் பாலிஃபீனால்கள் மிகுந்து காணப்படுகிறது. மேலும், இவை சுவைக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியதிற்கும் ஏற்றதாக இருக்கிறது.
“பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்ற பருப்புகளைப் போல வேர்க்கடலை ஊட்டச்சத்து மதிப்புமிக்கது அல்ல என பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், வேர்க்கடலை அதிக விலையுயர்ந்த பருப்புகளைப் போலவே பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும், இவற்றில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, வேர்க்கடலை மிகவும் மலிவு.”என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

வேர்க்கடலை மற்றும் வெல்லம் என்று நினைக்கும் போது, நமது நினைவுக்கு வருவது அற்புத சுவை தரும் ‘கடலை மிட்டாய்கள்’ தான். நமக்கு திடீரென ஏற்படும் பசிக்கு கடலை மிட்டாய்கள் ஆகச் சிறந்த தேர்வாகும். இவற்றின் செய்முறையை நாம் பார்ப்பதற்கு முன், இவை குளிர்கால சிற்றுண்டியாக இருப்பதற்கான சில காரணங்களை இங்கு பார்க்கலாம்.
வேர்க்கடலை மற்றும் வெல்லத்தின் (கடலை மிட்டாய்) நன்மைகள்
மொறுமொறுப்பான வேர்க்கடலையில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் பயோட்டின், தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
வெல்லத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஒரு இயற்கையான உடல் சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன. இவற்றின் இரும்பு பண்புகள் காரணமாக இரத்த சோகையை கட்டுப்படுத்த உதவுகிறது.

“வெல்லம்-வேர்க்கடலை கலவையானது ஒரு ‘முழு உணவை’ உருவாக்குகிறது மற்றும் சாப்பிடுவதற்கு அல்லது தயாரிப்பதற்கு கூட சிரமமாக இருப்பது இல்லை” என பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான ருஜுதா திவேகர் குறிப்பிடுகிறார்.
மேலும், அவரின் சமீபத்திய வலைதள பதிவில், வேர்க்கடலை மற்றும் வெல்லம் மைக்ரோ மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் பாலிபினால்களை வழங்குவதாகவும், இவற்றில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் சமீபத்திய அறிக்கை, கடலை மிட்டாயில் நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுவதாகவும், இவை வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கிறது.
குழந்தைகள் வெறுக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு பதில் கடலை மிட்டாய் ஒரு சிறந்த மாற்றாகவும் உள்ளது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணாமல் போன ஊட்டச்சத்துக்களை ஈடுசெய்கிறது. மேலும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.
நிலக்கடலையில் உள்ள செலினியம் மற்றும் வெல்லத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து, தசைகளை வலுவாக்குகிறது. தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவை பருவமடைதல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பை எளிதாக்க உதவுகின்றன.

இப்படி எண்ணற்ற அற்புத பயன்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கடலை மிட்டாயை எப்படி எளிய முறையில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
கடலை மிட்டாய் செய்யத் தேவையான பொருட்கள்
வெல்லம் – 1 கிலோ
நிலக்கடலை – 200 கிராம்
தண்ணீர் – வெல்லப் பாகை எடுக்க
உப்பு சிறிதளவு
தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி (தேவைப்பட்டால்)
கடலை மிட்டாய் சிம்பிள் செய்முறை
முதலில் நிலக்கடலையை வெறும் பாத்திரத்தில் இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு, வெல்லப்பாகு எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்சிக்கொள்ளவும். பாகு காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும். பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். ஆதாலால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சிக்கொள்ளவும்.
இதன்பின்னர் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால், ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.
மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை தட்டையான தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் அசத்தலான கடலை மிட்டாய் தயாராக இருக்கும். அவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“