neem juice benefits in tamil: ‘அசாடிராக்டா இண்டிகா’ என்றும் அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாகும். சமஸ்கிருதத்தில், வேம்பு என்பது அரிஸ்டா, அதாவது பூரணமானது, அழியாதது மற்றும் முழுமையானது என பொருள்படும். வேப்ப மரத்தின் இலைகள் மட்டுமல்ல, இவற்றின் விதைகள், வேர்கள் மற்றும் பட்டைகள் பல மருத்துவ மற்றும் அழகு குணங்களைக் கொண்ட முக்கியமான கலவைகளைக் கொண்டுள்ளன.
வேப்ப இலைகள், ஒரு பாரம்பரிய சக்திவாய்ந்த மருந்தாக உள்ளன. இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பல நூற்றாண்டுகளாக இப்போதும் பேசப்படுகின்றன. நம்முடைய வீடுகளில் அல்லது தோட்டத்தில் நிச்சயம் ஒரு வேப்ப மரம் கண்டிப்பாக இருக்கும்.
வேப்ப இலைகளில் நிம்பின், நிமாண்டியல் போன்ற 130க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான உயிரியல் சேர்மங்கள் உள்ளன. அவை உடலை குணப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வேப்ப இலைகளின் சாற்றை நாம் அன்றாட எடுத்துக்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

செரிமான பிரச்சினையில் இருந்து விடுதலை
நம்முடைய செரிமான பிரச்சனைகளுக்கு வேப்பிலை சாறு மிகச் சிறந்த மருந்தாகும். இவற்றை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். ஏனென்றால், இவற்றில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுக்கின்றன. இதன் மூலம் வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது குறைக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
வேப்பிலையிலும் நச்சுத்தன்மைகளை நீக்கும் சக்தி இருக்கிறது. வேப்பிலை சாற்றை தினமும் குடித்து வர உடம்பில் இருக்கும் நச்சுக்களை கழிவுகளை நீக்குகிறது. இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
காயங்களை ஆற்றுகிறது
வேப்பிலை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பி காணப்படுவதால், அவை அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. மேலும், இவற்றில் உள்ள பயோ-ஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்க உதவுகிறது. தவிர, நம்முடைய உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை சீக்கிரமே ஆற்றவும் உதவுகிறது.

தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது
வேப்பிலையின் அற்புத சாறு, நிறைய தொற்றுகளுக்கு காரணமான உள்ள பாக்டீரியா, வைரஸ், வைரல் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் காய்ச்சல், சலதோஷம் மற்றும் தொண்டை புண் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. இவற்றில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்காமல் இருப்பதில் இருந்தும் தடுக்கிறது.
சரும ஆரோக்கியதிற்கு உதவும் வேப்பிலை சாறு
வேப்பிலை சாறு சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடவும், பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்கவும் உதவுகிறது. மேலும், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பாதுகாக்கிறது.
வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் நிலைநிறுத்துகிறது. இது தெளிவாகவும் இளமையாகவும் இருக்க நமக்கு உதவுகிறது.

வேப்ப எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சேதமடைந்த சருமத்தை சரிசெய்வதுடன், தோல் பாதிப்புக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களின் விளைவையும் கட்டுப்படுத்துகிறது.
முடி வளர்ச்சியை தூண்டும்
அசாதிராச்டின் என்ற பொருள் வேப்பிலை சாற்றில் நிரம்பி காணப்படுகிறது. இது தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, நல்ல முடி வளர்ச்சிக்கும் தூண்டுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“