rice cooking in cooker tamil: குக்கர் நம்மில் பலருக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம். ஏன்னென்றால், சாதாரணமாக சாதம் வடிக்கும் போது அவற்றை குழைத்து விடுகிறோம். தவிர, சாதம் தயாராக அதிக நேரம் எடுக்கிறது. அதனால் குக்கர் நமக்கு அதிக பயன்களை தருகிறது.
எனினும், குக்கரில் சாதம் தயார் செய்யும் போது சில நேரங்களில் சாதம் நன்றாக வேகாமல் இருந்து விடுகிறது. அல்லது அதிகம் வெந்து விடுகிறது. அதாவது குழைந்து விடுகிறது. இதற்கு விடை காணா நாம் பல வழிகளை முயற்சித்து இருப்போம். ஆனால், அவை தோல்வியிலே முடிந்து இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவும், உதிரியான சாதம் தயார் செய்யவும் உங்களுக்காக நாங்கள் எளிய செயல்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
குக்கரில் உதிரி சாதம் சிம்பிள் டிப்ஸ்
பொதுவாக நாம் பாத்திரத்தில் சாதம் வடிக்க, உலை வைக்கும்போதே புழுங்கல் அரிசியையும் ஊற வைத்துவிடுவது வழக்கம். அது நன்கு ஊறி உப்பி உதிரி உதிரியாக வந்து விடும். ஆனால், குக்கரில் வைப்போர், அரிசியை அவசர அவசரமாக கழுவி உடனே குக்கரில் சேர்த்துவிடுவார்கள்.
எனவே, குக்கரில் சாதம் தயார் செய்யும் போது நீங்கள் அரிசியை நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். பின் அவற்றை நன்றாக அலசி வேக வைக்கவும்.
அரிசி அலசும் போது முதலில் ஊற்றும் தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். அந்த தண்ணீர் இறுக ஊற்றியதும் தண்ணீர் இல்லாமலேயே கைகளால் பிசைந்தவாறு அலசிக்கொள்ளவும்.
பிறகு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசவும். தண்ணீரை இறுத்துவிட்டு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசவும். இப்படி தொடர்ந்து 3 முறை நன்கு அலசிக்கொள்ளவும்.
இப்போது, குக்கரில் வைக்க தண்ணீர் அளவு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் என வைத்துக்கொள்ளவும். எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். அதன்பின்னர் வழக்கம்போல் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிட்டு, விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடிக்கொள்ளவும். அதன்பின் விசில் 3 முறை சத்தம் விட்டதும் அடுப்பை அணைத்துவிடவும்.
இதன்பிறகு உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே சில நிமிடங்களுக்கு விட்டுவிடவும். குக்கரின் பிரஷர் தானாக இறங்கியதும் குக்கர் மூடியை திறந்துகொள்ளவும்.
இப்போது அவற்றில் தயாராக இருக்கும் சாதத்தை கிளறி பார்க்கவும். சாதம் நிச்சயம் பூப்போல வெந்திருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது புதிய அரிசியாக இருந்தால் அவற்றுக்கு தண்ணீர் 2 1/2 டம்ளர் வைத்தால் போதுமானதாக இருக்கும். பழைய அரிசியாக இருந்தா 3 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.