Sambar Recipe Tamil News: முருகை கீரை நமது வீடுகளில் எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் ஒன்றாக உள்ளது. இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே நமக்கு கிடைக்கிறது. இவற்றின் இலைகளை உருவி மிளகுடன் சேர்த்து ரசம் போல் சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் உடல் வலிகள் நீங்கும். மேலும் இதன் இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் முருங்கை கீரையை அருமையான சுவையில் சாம்பார் செய்யும் முறையை பற்றி இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை – 3 கையளவு
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 10 பற்கள்
அரிசி – 2 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – 25 மிலி
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் முருங்கை இலைகளை காம்பு இல்லாமல் ஆய்ந்து கொள்ளவும். பின்னர் அரிசி மற்றும் துவரம் பருப்பை நொறுநொறுப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் சின்ன வெங்காயம் சேர்க்கவும். அதில் கொஞ்சம் பூண்டையும் தட்டிப்போட்டு நன்றாக வதக்கவும்.
இவை ஓரளவிற்கு வதங்கிய பிறகு காய்ந்த மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு, அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்துக் கலந்து கடாயில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். பருப்பு ஓரளவு குழையும் போது, ஆய்ந்து வைத்துள்ள கீரையை அலசி அதில் போடவும். மேலும் தேவையான அளவு உப்பையும் அதில் சேர்க்கவும்.
இவையனைத்தும் 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பை அணைக்கவும். பிறகு பருப்பு கடையும் சட்டியில் அவற்றை கொட்டி நன்றாக கடையவும். அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
இந்த கலவை நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். இப்போது நீங்கள் விரும்பிய சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயாராக இருக்கும்.
இப்படி எளிதில் சமைக்கக்கூடிய சத்தான முருங்கை கீரை சாம்பாரை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil).