ஒரு நாள் முழுமைக்கும் தேவையான விட்டமின் சி ஒரு நெல்லிக்காயில் கிடைத்துவிடும். எனவே தேடி பிடித்து வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சித்த மருத்துவர் சிவராமன் வலியுறுத்தியுள்ளார்.
புகழ்பெற்ற சித்த மருத்துவர் சிவராமன் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நெல்லிக்காயின் மகத்துவம் பற்றி கூறினார். மேலும் 100 கிராம் நெல்லிக்காயில் 190லிருந்து 600 மில்லி கிராம் விட்டமின் சி இருக்கு. ஒரு நாளைக்கு 150 மில்லி கிராம் விட்டமின் சி தான் நமக்கு தேவை. இது ஒரே ஒரு நெல்லிக்காயில் கூட கிடைத்துவிடும். சின்ன நெல்லிக்காயாக இருந்தால் ஒன்று – இரண்டு தேவைப்படலாம். ஒரே ஒரு நெல்லிக்காயில் ஒரு நாள் முழுமைக்கும் தேவையான விட்டமின் சி கிடைத்துவிடும். எனவே இதை ஏன் நாம் சாப்பிடக் கூடாது? தேடித் தேடிப் போய் இந்த நெல்லிக்காயை வாங்க வேண்டாமா? என்று மருத்துவர் சிவராமன் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பிடித்த நடிகரின் திரைப்படத்திற்கு எப்படியாவது டிக்கெட் வாங்கி விட, பல மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். அடித்து பிடித்து டிக்கெட் வாங்குகிறோம். அதற்கு கொடுக்கக் கூடிய மெனக்கெடலை நெல்லிக்காயை தேடி வாங்குவதற்கும் நாம் செய்ய வேண்டும். எங்கு கிடைத்தாலும் தேடி போய் வாங்கி சாப்பிட வேண்டும். காலையில் நெல்லிக்காயை சுவைத்துச் சாப்பிடுவது மிகச் சிறந்தது என்று மருத்துவர் சிவராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“