Tamil health tips: இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவெடுத்துள்ள இந்த தருணத்தில், நமது நோய் எதிர்ப்புச் சக்தியில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உடல் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதோடு, நோயை உண்டாக்கும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், சில உணவுகள் உங்கள் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை அறியாமலேயே நசுக்கும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்போதும் அதிக அளவில் வைத்திருக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
சோடா (Sodas)
கோடை காலங்களில் குளிர்ந்த சோடா உங்களுக்குப் பிடித்தமான ஒரு தேர்வாக இருக்கலாம். ஆனால் உங்கள் தாகத்தைத் தணிக்கும் பானம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த சோடாக்கள் மற்றும் ஃபிஸி பானங்கள் சர்க்கரை நிரம்பியுள்ளன. அவை அடிப்படையில் காலியான கலோரிகள், அதாவது அவை உடலுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குவதில்லை.
சோடாக்களின் வழக்கமான நுகர்வு உடல் பருமன் ஆபத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோயெதிர்ப்பு செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கிறது.
ஃப்ரைடு ஃபுட்ஸ் (Fried Foods)
நீங்கள் எண்ணெயில் வறுத்த உணவை (ஃப்ரைடு ஃபுட்ஸ்) விரும்புபவராக இருந்தால், அவற்றை தவிர்ப்பதற்கு சரியான நேரம் இதுதான். அதிகமாக எண்ணெயில் வறுத்து எடுக்கப்பட்ட உணவுகளில் (டீப் ஃப்ரைடு ஃபுட்ஸ்) கிரீஸ், கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.
மது அருந்துதல் (Alcohol)
எப்போதாவது மது அருந்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படாது. ஆனால் நீங்கள் மது விரும்பியாக அல்லது தினமும் அல்லது ஒவ்வொரு வாரமும் மது அருந்துபவாராக இருந்தால் அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. மேலும், சரியான தூக்கம் வருவதை தடுக்கிறது.
தவிர, உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது, கல்லீரல் செயல்பாட்டை சேதப்படுத்துகிறது மற்றும் இதயத்தையும் கூட பாதிக்கிறது.
பேக்கரி பொருட்கள் (Bakery goods)
பேக்கரி பொருட்கள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக பசையம், கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. கேக்குகள், குக்கீகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற பொருட்கள் வெள்ளை மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவை மூன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சேதப்படுத்துவதாக அறியப்படுகிறது.
நீங்கள் பேக்கரி பொருட்களை உட்கொள்ள விரும்பினால், கோதுமை மாவு அல்லது மற்ற ஆரோக்கியமான மாவு சார்ந்த பொருட்களைத் தேர்வு செய்யவும்.
சர்க்கரை பொருட்கள் (Sugary products)
நீங்கள் இனிப்பு அதிகம் உள்ள பொருட்களை விரும்புவராக இருந்தால், நோயெதிர்ப்பு சக்தி இழப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும். வெள்ளை சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு மோசமான உணவு என்று அழைக்கப்படுகிறது.
மிட்டாய்கள், சாக்லேட்கள், கேக்குகள், டோனட்ஸ், பிஸ்கட்கள் மற்றும் பிற இனிப்பு வகைகளில் வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. தக்காளி கெட்ச்அப், பழச்சாறுகள், தானியங்கள், ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் கூட சர்க்கரை மறைந்துள்ளது.
முதலில், உங்கள் உணவில் இருந்து வெள்ளைச் சர்க்கரையை நீக்கி, அதற்குப் பதிலாக வெல்லம், தேன், தேங்காய்ச் சர்க்கரை, மேப்பிள் சிரப் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். இந்த தயாரிப்புகள் அனைத்தும் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட சமமான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. மேலும், அவற்றை விட இவை மிகவும் ஆரோக்கியமானவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.