மு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: ‘புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்’ – மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK New President LIVE Update: மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதை கொண்டாட திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

திமுக தலைவராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK New President LIVE: மு.க.ஸ்டாலின் , திமுக புதிய தலைவராக பொதுக்குழுவில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறார். போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின், அரை நூற்றாண்டாக அரசியலில் நீடித்து வருபவர்! திமுக.வின் தலைவராக 1969 முதல் செயல்பட்டு வந்த மு.கருணாநிதியின் மகனாக, இளைஞர் திமுக.வில் அடியெடுத்து வைத்தவர்!

‘புதிதாய் பிறந்த’ மு.க.ஸ்டாலின்: உடன்பிறப்புகளின் 3 முக்கிய எதிர்பார்ப்புகள் To Read, Click Here

ஸ்டாலின் அரசியல் பயணம்: திமுக தொண்டன் முதல் கட்சியின் தலைவர் வரை! To Read, Click Here

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin” – மகிழ்ச்சியில் தொண்டர்கள் To Read, Click Here

கருணாநிதி மறைவை தொடர்ந்து, திமுக புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று திமுக பொதுக்குழுவில் வெளியாகிறது. பொதுக்குழு இன்று (ஆகஸ்ட் 28) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

திமுக தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுவில் சுமார் 4000 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. திமுக புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதை கொண்டாட திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

MK Stalin Elected As DMK President, DMK General Council Meet LIVE: திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுக்குழு லைவ் நிகழ்வுகள்:

03.00 PM: திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் போது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


01:48 PM:  திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பொருளாளர் துரைமுருகனும் அஞ்சலி செலுத்தினார். அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

01:10 PM: “தமிழகத்தை திருடர்கள் கைகளில் இருந்து மீட்க வேண்டும். தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சமூகத் தீமைகளை அகற்றுவதே நமது முதல் கடமையாகும். இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும், மு.க.ஸ்டாலினாகிய நான், இன்று புதிதாய் பிறக்கிறேன். இது வேறொரு நான். தமிழகத்தை புதிய எதிர்காலத்தை நோக்கி நான் அழைத்துச் செல்வேன்” என்றும் ஸ்டாலின் உரையாற்றினார்.

01:05 PM: திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே’ என்று பேச்சைத் துவக்கிய ஸ்டாலின், “நான் தலைவர் கருணாநிதி கிடையாது. அவரைப் போல பேச தெரியாது. பேசவும் முடியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு என்னிடம் உள்ளது.” என்றார்.

12.50 PM: சிறுவனாக பார்த்து என் கண் முன் வளர்ந்தவர் இன்று திமுக தலைவராகி இருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன், ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார். மேலும், ஒருமனதாக என்னை பொருளாளராக தேர்வு செய்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

12:00 PM: ரகுமான்கான், பழனிமாணிக்கம், தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினர்.

11:35 AM: ராகுல் காந்தி வாழ்த்து: மு.க.ஸ்டாலின் திமுக.வின் புதிய தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கிறார்.

அதில், ‘திமுக தலைவராக தேர்வு பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்! அவரது அரசியல் பயணத்தில் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

11:15 AM: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, அறந்தாங்கி ராசன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அர.சக்கரபாணி, ஏ.கே.எஸ்.விஜயன் பேசுகிறார்கள்.

10:50 AM: திமுக செயல் தலைவர் பதவி உருவாக்கியது தொடர்பான கழக விதிகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானத்தை திருச்சி சிவா முன்மொழிந்தார். அது நிறைவேற்றப்பட்டது. திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் தீர்மானத்தை குத்தாலம் கல்யாணம் வாசித்தார்.

10:37 AM: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்தார். அதன்பிறகு மேடையில் மு.க.ஸ்டாலினுக்கு அன்பழகன் சால்வை அணிவித்தார். அன்பழகன் காலை தொட்டு ஸ்டாலின் வணங்கினார்.

பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அன்பழகன் அறிவித்தார். ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டதும் அரங்கம் அதிரும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.

10:35 AM: தலைவர், பொருளாளர் தேர்வு முடிந்ததும் யாரும் மேடைக்கு வந்து சால்வைகளோ, புத்தகங்களோ அணிவிக்ககூடாது. தலைவரும், பொருளாளரும் கலைஞர் நினைவிடம் செல்ல இருக்கிறார்கள். மாலை 4 மணிக்கு தலைவராக கலைஞர் அமர்ந்த அதே அறையில் உங்களின் வாழ்த்துகளை தலைவர் பெற்றுக்கொள்வார் என ஆலந்தூர் பாரதி கூறினார்.

10:30 AM: கலைஞர் அடியொற்றி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டால் கழக நிதிநிலை திருப்திகரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தலைவர், பொருளாளர் தேர்வு குறித்து அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி முன்னுரை வாசித்தார்.

10:25 AM: காலை 10.20 மணி வரை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் திமுக.வின் வரவு-செலவு அறிக்கையை தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் வாசித்தார்.

10:15 AM: திமுக பொதுக்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கும் இரங்கல் மற்றும் தலா ரூ2 லட்சம் வழங்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும், கேரள வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9:45 AM:: அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு தொடங்கியது. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவின் லைவ் வீடியோ மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் லைவ்வாக ஒளிபரப்பு ஆகிறது. அதை இங்கும் காணலாம்.

9:30 AM: மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழியின் நினைவு நாள் இன்று! பொதுக்குழுவுக்கு செல்லும் முன்பாக தனது நண்பரை நினைத்து ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதில், ‘இயக்கம் காக்கும் பணியில் மூன்று தலைமுறைகளாக துணை நிற்கிறது அன்பில் குடும்பம். தலைவர் மீதும், என் மீதும் தனி அன்பு காட்டி என் வளர்ச்சியில் மகிழ்ந்தவர் நண்பர் பொய்யாமொழி. அவர் நினைவு நாளில் இயக்கம் காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் நிலையில் அவர் நினைவைப் போற்றுகிறேன்.’ என கூறியிருக்கிறார்.

பொய்யாமொழியின் மகனும் திமுக இளைஞரணி துணைச் செயலாளருமான மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அன்பில் மொய்யாமொழிக்கு அஞ்சலி செலுத்தும் படத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டார்.

9:00 AM: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்றே தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர், ‘திமுக தலைவராக முன்மொழியப்பட்டு நாளை தேர்வு செய்யப்படும் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

8:30 AM : மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவராக அதிகாரபூர்வமாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி, பொதுக்குழு நடைபெறும் அண்ணா அறிவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழுவின் நிகழ்வுகளை அறிய அறிவாலய வளாகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பொதுக்குழு நடைபெறும் கலைஞர் அரங்கின் முன்பு பந்தல் போடப்பட்டிருக்கிறது.

8:00 AM: திமுக தலைவர் பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி நடந்தது. மு.க.ஸ்டாலின் பெயரில் கட்சியின் 65 மாவட்டச் செயலாளர்களும் முன்மொழிதல் படிவங்களை சமர்ப்பித்தனர். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin dmk president general council meet

Exit mobile version