திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட, ஐந்து திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 542 கிலோ எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், திருச்சி சமயபுரம் கோயிலில் இருந்து மும்பை பாரத ஸ்டேட் பேங்க் வங்கிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஓய்வுப்பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, கே.ரவிச்சந்திர பாபு, மாலதி ஆகியோர் முன்னிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர், எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகளிடம் தங்கத்தை ஒப்படைத்தனர். தமிழகத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 5 கோயில்களில் கடந்த, 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும்' என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இந்தப் பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில், தமிழகம், 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, கே.ரவிச்சந்திர பாபு, மாலதி அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், கோயில்களுக்குச் சென்று காணிக்கை தங்கங்களில் உள்ள அழுக்கு, அரக்கு, கற்கள் ஆகியவற்றை அகற்றி, தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியை நேரடியாக பார்வையிட்டனர்.
அப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட, ஐந்து கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை, கோவிலுக்கு தேவைப்படும் நகைகளை தவிர மற்ற தங்கத்தை முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பைக்கு தங்கம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:-
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில், கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடரப்பட்டு, தடை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்திற்கு பெறப்பட்ட தடையை நீக்கி, அந்த வழக்கை விரைந்து முடித்து, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை திருப்போரூரில் உண்டியலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட செல்போன் விவகாரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும்.
தி.மு.க ஆட்சி அகற்றும் வரை காலனி அணிய மாட்டேன், 48 நாட்கள் விரதம் இருப்பேன் என தெரிவித்திருப்பது அவருடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இருக்கும். அண்ணாமலை பகல்கனவு காண்கிறார். அது எப்போதும் நிறைவேறாது. ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு மட்டும் 2.5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று பக்தர்கள் கோவிலிலேயே தங்குவதற்கு 50 யூனிட் மணல் மணல்வளியில் கொட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிரந்தர கார் மற்றும் பஸ் பார்க்கிங் வசதி செய்து தரப்படும். ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் 2.25 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கிழக்கு கோபுர வாயில் திறக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது, அந்த பணிகள் நிறைவு பெற்று, வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.
மலைக்கோட்டையில் ரோப் கார் அமைப்பதற்கு தேவையான முயற்சியை மேற்கொள்வோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என சேகர்பாபு ஸ்ரீரங்கத்தில் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் சேகர்பாபு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருக்கோயிலில் இன்று (27.12.2024), ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் செல்வி ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் உள்ளிட்ட 5 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கிடவும், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கியில் துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷினி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் இணைந்து ஒப்படைத்தோம். தொடர்ந்து, அன்னாதானம் திட்டத்தை பார்வையிட்டோம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.