Tamil Nadu news today updates : இன்று தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை நீங்கள் இங்கே காணலாம். தமிழகத்தில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. சென்னை, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் மிதமான வாய்ப்புகள் உள்ளது.
World Cup Cricket : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்திய அணி. அது தொடர்பான முழுமையான தகவல்களை நீங்கள் இங்கே பெற்றுக் கொள்ளலாம். மேலும் படிக்க : India vs England Score: 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி! ரோஹித் சதம் வீண்!
Tamil Nadu news today updates : நேற்று பிரதமர் மோடி, இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பின்பு, மன் கீ பாத்தில் உரையாடினார். அதில் மக்கள் மத்தியில் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், ஸ்வச் பாரத்தைப் போன்றே, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு மக்கள் பெரும் அளவில் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
Fuel Price : சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ. 73.15 காசுகள் ஆகும். டீசல் விலை 06 காசுகள் அதிகரித்து 67.96 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள
Web Title:Tamil nadu news live updates chennai weather political events lpg price mtc staff strike
தமிழக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'சென்னை தண்ணீர் பஞ்சத்துக்கு மக்களின் கோழைத்தனமான அணுகுமுறையும், சுயநல எண்ணமும் கூட காரணம்' என்று கிரண்பேடி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அத்திவரதரை, பக்தர்கள் நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, தென்காசியில் நாளை காலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அமமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா போட்டியிட்டவர். அதுமட்டுமின்றி, அமமுகவின் தலைமை அலுவலகம் இசக்கி சுப்பையா இடத்தில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது..
ரூ.2 கோடி காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூ.2 கோடி கடன் பெற்ற வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணனை நிதித்துறை செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தலைமைச் செயலாளரானதால் தற்போது நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீர் லாரிகள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பாணையை வெளியிட உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் லாரிகள் உள்ளாட்சித்துறை ஒழுங்குமுறை விதிகளின் படி அரசிடம் பதிவு செய்வது கட்டாயம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது" என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆறுகளில் நீரின் தன்மையை கண்காணிக்க மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நீர் தர மேலாண்மை பிரிவு ரூ.50 லட்சம் செலவில் தொடங்கப்படும் என அமைச்சர் கருப்பணன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக மக்களிடம் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக மக்கள் மீது வைத்த மோசமான, தரக்குறைவான விஷமத்தனமாக விமர்சனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் புதுச்சேரி ஆளநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும். கிரண்பேடியை திரும்பப் பெற்று அரசமைப்பு சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, 'சென்னை தண்ணீர் பஞ்சத்துக்கு மக்களின் கோழைத்தனமான அணுகுமுறையும், சுயநல எண்ணமும் கூட காரணம்' என்று கிரண்பேடி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து நான் தனிப்பட்ட கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மக்களின் கருத்தையே நான் பிரதிபலித்து ட்வீட் செய்தேன் என்று கூறியுள்ளார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. இன்று காலை கிரண்பேடியின் ட்வீட் குறித்த திமுகவின் கருத்தினை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஏற்கனவே சிகர் தவான் உலக கோப்பையில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணியில் இடம் பெற்றார். அவரும் காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறார்.
சமீபத்தில் டெண்டரில் எடுக்கப்பட்ட அனைத்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளையும் வேலைக்காக எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாமக்கலில் நடைபெற்ற தென்னக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று அறிவித்தது. இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரிகள் சங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
மக்களவையில் இன்று ஆவணக் கொலைகள் குறித்து பேசிய சிதம்பரம் தொகுதியின் எம்.பி. தொல். திருமாவளவன், சட்ட கமிஷனின் பரிந்துரைப்படி, ஆணவ படுகொலைகளை தடுக்க மத்திய அரசு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்புடன், மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் இம்முடிவு என தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். இன்று மாலைக்குள் நிலுவையில் இருக்கும் சம்பளத்தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் போராட்டம் வாபஸ்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வசிக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக இருந்து வருகிறது. 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு தகவல். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், இன்று அவையில், மற்ற பிரச்சனைகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் தமிழக மக்களை வரம்பு மீறி சுயநலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவையில் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சர் சண்முகமும் கிரண்பேடி மீதான ஸ்டாலின் குற்றச்சாட்டு சரிதான் என்றும் பேசியுள்ளார். ஆனால் கிரண்பேடி மீது கண்டனங்களை பதிவு செய்வதற்கு பதிலாக, இந்த பிரச்சனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு என ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
தெற்காசியாவின் மிகப்பெரிய கால்நடைப்பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். சேலத்தில் உலக தரமிக்க புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட இருப்பதாகவும் அது தொடர்பான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை மத்திய அரசு உடனே நிறுத்திவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை. 2 ஆயிரம் அடி ஆழத்தில் துளையிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு மட்டும் மாசல்ல, மனித உயிருக்கும் அது கேடு விளைவிக்கும் என்று பேச்சு. நிலத்தாடி நீர் வற்றிவிட்டது. வறண்ட நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் நிலைமை இதைவிட மோசமாகவே அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிப்பு. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
ஜூலை 18ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் போட்டி. கூட்டணியில் இணையும் போது கூறப்பட்டது போலவே மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பணிமனைகளில் ஓட்டுநர்கள் / நடத்துனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் திங்கள் கிழமை குறித்த நேரத்திற்கு மக்களால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்ற மன உளைச்சலும் இருந்து வருகிறது.
Caption
கஜா பேரழிவால் மின்சார வசதி பெரும் அளவிற்கு பாதிப்பை சந்தித்தது. அதனை முற்றிலும் தவிர்க்கும் வகையில் உயர் கோபுர் மின் கம்பிகளுக்கு பதிலாக புதைவட மின் கம்பிகள் வழியாக மின்சார வசதியை மக்களுக்கு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் வேளாங்கண்ணியில் துவக்கம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் சட்ட ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ குமாரதாஸூக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. இன்று தமிழக சட்டசபையில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் அறிந்து கொள்ள
அயப்பன் தாங்கல், தி நகர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே போராட்டங்களை கைவிட்டு ஒரு சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். காலை 4 மணியில் இருந்து 10 மணி வரையில் வெறும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை கடற்கரை நகரங்களில் சீராக முன்னேறி வருகின்றது. மும்பையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவிட்டது. நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
60% சம்பளத்தொகை மட்டுமே வழங்கப்பட்ட காரணத்தாலும், மீதம் 40% சம்பளப்பணம் இன்னும் ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்ற காரணத்தாலும் இன்று காலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாநகர போக்குவரத்து ஊழியர்கள். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியில் ஈடுபட்டு வருகின்றனர். 36 பணிமனைகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவேண்டிய நிலையில் வெறும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. வேலைக்கு செல்வோர், கல்லூரி, பள்ளிகளுக்கு செல்வோர் பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் மக்கள் ரயில்நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
2 நாட்கள் விடுமுறைக்குப்பின் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூலை 1ம் தேதி) மீண்டும் துவங்குகிறது. குடிநீர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களில் புயலை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய 40% ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நேற்று வங்கிகள் அனைத்தும் விடுமுறை என்பதால் ஊழியம் வழங்குவதில் தாமதம் ஆகிவிட்டது என்றும், இன்று மாலைக்குள் அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் சம்பளப் பணம் செலுத்தப்பட்டு விடும் என்றும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் பரசுராம் விரைவு ரயில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில், திருச்சி - திருவனந்தபுரம் இண்டெர்சிட்டி, சி.எஸ்.எம்.டி - நாகர்கோவில் விரைவு ரயில், ஜாம்நகர் - திருநெல்வேலி விரைவு ரயில், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் சேவைகளில் புறப்படும் நேரம் மற்றும் சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை- அரக்கோணம் - 1 ரயில் கூடுடதலாக இயக்கப்படுகிறது. அதே போன்று சென்னை - கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 2 ரயில்களும், குறுக்குப்பிரிவு சேவையில் இரண்டு ரயில்களும், சென்னை கடற்கரை செங்கல்பட்டு மார்கத்தில் இரண்டு புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்வது தொடர்பாக, 6ம் தேதி நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
வெள்ளிக்கிழமை (28/06/2019) அன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. மறைந்து போன சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ ராதாமணி உள்ளிட்டோருக்கும், மறைந்த போன முன்னாள் எம்.எல்.ஏக்கள் 8 பேருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அன்று முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இன்று வனம் மற்றும் சுற்றுச் சூழல் மானியக் குழு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி. ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வருகின்ற 24ம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே எம்.பி. கனிமொழி தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 8ம் தேதி ஆகும். 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா இன்று துவங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரையான 48 நாட்களுக்கு அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டு, ரூ. 637க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு அதன் விலை ரூ. 737.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் விலை ரூ. 494.35 ஆகும். இந்த சிலிண்டர் விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பணிமனைகளில் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஜூன் மாதத்துக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாததை கண்டித்து இன்று அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.