Today News Highlights: குமாரசாமி அரசு கவிழ்ந்தது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

Chennai Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 76.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.96க்கு விற்பனையாகிறது.

By: Jul 23, 2019, 8:48:35 PM

Tamil Nadu news today live updates : இன்றைய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அங்கு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர செய்திகள்: தன்னுடைய மகள் ஹரித்ரா ஸ்ரீஹரண் திருமணத்திற்காக 6 மாத பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நளினி. அவருடைய கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் அளித்துள்ளது. அதற்கான சிறைத்துறை நடவடிக்கைகள் நேற்று முடிவுற்ற நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க :28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி!

Karnataka Crisis

பெரும்பான்மையை நிரூபிக்க புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும், கர்நாடக சட்ட அமைச்சரும், சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் வேண்டுகோள் வைத்தனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று காலை தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.  கர்நாடக சட்டப்பேரவையில் 22/07/2019 அன்றே வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதனை நேற்று அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. இடைப்பட்ட நேரத்தில் குமாரசாமி ராஜினாமா என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.

Chennai weather

சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம், வட தமிழகத்தின் திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலில்  அமைந்திருக்கும் திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, Nalini Parole, Cauvery River, Karnataka Crisis - இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனே அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
20:46 (IST)23 Jul 2019
அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - ஓ.பி.எஸ். விளக்கம்

பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்த பின்னர் இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்தித்தார்

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து தமிழகத்தின் நலனுக்காக நிதி தொடர்பாக சந்தித்து பேசினேன். அவரும் பல்வேறு ஆலோசனை , வழிமுறைகளை கூறியிருக்கிறார். மேலும்,வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்டுள்ளேன், அதை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதிமுக.வில் இணக்கமான சூழ்நிலை இல்லை அதனால் தான் அமித்ஷாவுடனான சந்திப்பு ..! என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அதுபோன்ற எந்த பிரச்சனையும் அதிமுகவில் இல்லை என தெரிவித்தார்.

20:33 (IST)23 Jul 2019
ITR Filing deadline extended: வருமான வரி தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ல் இருந்து ஆகஸ்ட் 31-க்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு இது வாய்ப்பு.

19:58 (IST)23 Jul 2019
பாஜக ஆட்சி அமைகிறது

கர்நாடகா சட்டமன்றத்தில் மணி அடிக்கப்பட்டு அவையின் கதவு மூடப்பட்டு, வாக்கெடுப்பு துவங்கியது. பகுதி வாரியாக பிரித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்குவார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வராக தொடர ஆளுனர் கோருவார்.

தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக.வுக்கு வழங்கலாம். எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19:44 (IST)23 Jul 2019
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி, குமாரசாமி அரசு கவிழ்ந்தது

கர்நாடகா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்து கவிழ்கிறது.

19:36 (IST)23 Jul 2019
கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவில் அரசு தப்புமா? என்பது தெரியவரும்.

18:39 (IST)23 Jul 2019
திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வெட்டிக் கொலை

நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை. வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை

18:04 (IST)23 Jul 2019
6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - குமாரசாமி

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன். நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான். காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார் என்ற கர்நாடக சட்டசபையில் குமாரசாமி பேசியுள்ளார்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே குமாரசாமி பதவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17:13 (IST)23 Jul 2019
தமிழக விவகாரத்தை மேற்கோள் காட்டி சித்தராமையா பேச்சு

தமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேசியுள்ளார். அரசுக்கு அளித்த ஆதரவை 18 எம்.எல்.ஏக்கள் விலக்கி கொண்டு ஆளுநரிடம் கடிதம் அளித்ததும், சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 எம்.எல்,ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதுகுறித்த முடிவை ஆளுநரிடம் கடிதம் வாயிலாக தெரிவித்தனர். அப்போது கொறடா உத்தரவு கூட இல்லாத நிலையில் சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். தமிழக சபாநாயகர் உத்தரவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் நீதிமன்றம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வர எவ்வாறு விலக்கு கொடுக்க முடியும் என கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

17:07 (IST)23 Jul 2019
பிரிட்டனின் புதிய பிரதமர்

தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

16:05 (IST)23 Jul 2019
போலீசார் வரதட்சணை வாங்கக்கூடாது – டிஜிபி திரிபாதி உத்தரவு

போலீசார், பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்று டிஜிபி திரிபாதி போலீசாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

15:36 (IST)23 Jul 2019
முகிலனிடம் 3 மணிநேரம் சிபிசிஐடி விசாரணை : நீதிமன்றம் அனுமதி

முகிலனிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த  3 நாள் அனுமதி கேட்ட நிலையில் , நீதிமன்றம் 3 மணி நேரம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

15:08 (IST)23 Jul 2019
சென்னை அருகே மாணவர்கள் மோதல் – 7 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை அரும்பாக்கம் அருகே கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

14:19 (IST)23 Jul 2019
அத்திவரதரை இனி சிறப்பு கட்டணத்தில் ஆயிரம் பேர் தரிசிக்கலாம்

ரூ.300 கட்டணத்தில் அத்திவரதரை இனி தினமும் ஆயிரம் பேர் தரிசிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 500 பேர் தரிசித்து வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

13:35 (IST)23 Jul 2019
பிள்ளை பிடிப்பதுபோல் அதிமுகவினரை பிடிக்கமுடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் உண்மை விசுவாசிகள், திமுகவுக்கு வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, பிள்ளை பிடிப்பதுபோல், அதிமுகவினரை பிடிக்க முடியாது.  பிள்ளை பிடிப்பதுபோல அதிமுகவினரை பிடிக்கும் ஸ்டாலினின் திட்டம் எடுபடாது என்று அவர் மேலும் கூறினார்.

13:16 (IST)23 Jul 2019
தனியார் நிறுவனங்களிலும் ஆந்திர மக்களுக்கே முன்னுரிமை : முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் உள்ள 75 சதவீத பணியிடங்கள், ஆந்திர மக்களை கொண்டே நிரப்பப்படும். அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனியார் நிறுவன பணியிடங்களிலும் ஆந்திர மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

13:13 (IST)23 Jul 2019
நிவாரணம் கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து

கஜா புயலால் பாதிப்படைந்த மக்கள் நிவாரணம் கோரி மறியலில் ஈடுபட்டனர்.  அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

13:10 (IST)23 Jul 2019
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை விட, வேலூர் மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

13:07 (IST)23 Jul 2019
ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம் - இயக்குனர் ரஞ்சித்திற்கு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை கருத்து விவகாரம் தொடர்பாக, கும்பகோணம் நீதிமன்றத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஆஜரானார்.  நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

13:04 (IST)23 Jul 2019
கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகர் உறுதி

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியளித்துள்ளார். சபாநாயகர்  உறுதியளித்ததை அடுத்து, சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை  உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

12:49 (IST)23 Jul 2019
நீலகிரி, கோவைக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:46 (IST)23 Jul 2019
ஆகஸ்ட் 2-ம் தேதி பி.எட்., படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.எட்., படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்படும் என பி.எட்., மாணவர் சேர்க்கை செயலாளர் தில்லை நாயகி தெரிவித்துள்ளார்.

12:05 (IST)23 Jul 2019
நிதி அமைச்சரை சந்தித்த துணை முதல்வர்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசிவருகிறார் துணை முதல்வர். 

12:03 (IST)23 Jul 2019
டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், விவசாயிகளை பிரதமர் நேரில் அழைத்து பேசி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

11:44 (IST)23 Jul 2019
Actor Surya Birthday

இன்று நடிகர் சூர்யாவின் 44வது பிறந்த தினம். இதனை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர். யார் யாரெல்லாம் சூர்யாவிற்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள

11:33 (IST)23 Jul 2019
எம்.பி. ரவிக்குமார் கேள்விக்கு அமைச்சர் பதில்

விழுப்புரத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படுமா என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் நிதிப்பகிர்வின் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்க திட்டம் உள்ளதையும் அவர் கூறினார்.

11:19 (IST)23 Jul 2019
TikTok Videos : 60 லட்சம் வீடியோக்களை நீக்கிய டிக்டாக்

டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். பின்பு முறையான ஆளுகையை பயன்படுத்தி தேவையற்ற வீடியோக்களை நீக்குகின்றோம் என்ற உறுதியின் பேரில் மீண்டும் செயல்பட்டு வருகிறது டிக்டாக் செயலி. சமீபத்தில் இந்த செயலியில் இருந்து 60 லட்சம் வீடியோக்களை  அந்நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

11:05 (IST)23 Jul 2019
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கெயில் எரிவாயு குழாய்கள் பதித்தல் போன்ற திட்டங்களுக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10:41 (IST)23 Jul 2019
MK Stalin

சென்னை கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அங்கன்வாடி ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ. 82 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்ட தாமரைக்குளம் மற்றும் பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.

10:34 (IST)23 Jul 2019
சங்கரன் கோவில் சங்கரநாராயணன் கோவில் தபசு விழா

நெல்லையில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணன் கோவிலில் தபசு விழா நடைபெறுவதை ஒட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியர்.

09:58 (IST)23 Jul 2019
Cauvery River : ஒகேனக்கலில் பரிசல் சவாரி தடை

தொடர்ந்து காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் சவாரிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கலை பார்வையிடுவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

09:41 (IST)23 Jul 2019
Karnataka Crisis : நேரில் வந்து விளக்கம் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை

கர்நாடக சட்டமன்ற சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரையும் இன்று நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று கூறி நேற்று சம்மன் விடுத்தார். அந்த சம்மனில் உங்களை தகுதி நீக்கம் செய்தால் என்ன என்று கேள்வியும் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த 15 எம்.எல்.ஏக்களும் நேரில் வந்து சந்திக்க 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

09:31 (IST)23 Jul 2019
அத்திவரதரை தரிசிக்கும் முதல்வர் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு

காஞ்சியில் இருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய பல்வேறு முக்கிய அரசியல்வாதிகள் வரதராஜ பெருமாள் கோவிலில் படையெடுக்க, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளார். மேலும் பக்தர்களின் வசதிகளுக்காக செய்யப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்ய உள்ளார். அவரின் வருகையை ஒட்டி 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

09:06 (IST)23 Jul 2019
New Education Policy - புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து - திருநாவுக்கரசர் ஆதரவு

புதிய கல்விக் கொள்கைகள் குறித்தும், மூடப்படும் அரசு பள்ளிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார் நடிகர் சூர்யா. அவருடைய கருத்துகளை பலரும் வரவேற்று பேசி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். அனைவரும் ஆதரிக்க கூடிய கருத்து தான். நானும் ஆதரிக்கிறேன். வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

08:52 (IST)23 Jul 2019
Chandrayaan 2 : Chennai Metro Water Wishes

சந்திரனில் நீர் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்காகவே விண்ணில் ஏவப்பட்டுள்ளது சந்திரயான். இதற்கு பல்வேறு தலைவர்களும், ஆராய்ச்சியாளர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருக்க, சென்னை மெட்ரோ மிகவும் வித்தியசமாக, நிலவில் தண்ணீர் இருந்தால் முதலில் எங்களுக்குத் தான் அறிவிக்க வேண்டும். ஏன் என்றால் எங்கள் நகரம் தற்போது நீர் இல்லாமல் மிகவும் வாடி வருகிறது என்று நகைச்சுவை தோணியில் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டது.  சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி  வருகிறது இந்த ட்வீட்

Tamil Nadu news today live updates : இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. 48 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த 130 கோடி இந்தியர்களின் கனவாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் நேற்று மதியம் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2. இதற்கு முன்பு 15ம் தேதி திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு அதில் இருப்பது கண்டறியப்பட்டு அந்த திட்டம் இடைக்காலமாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டால் நிலவில் செயற்கை கோளை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி நடத்தும் முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.  இதன் முழுமையான தகவல்களைப் படிக்க

Cauvery water reached Mettur dam

கர்நாடகாவில் திறந்துவிடப்பட்ட நீர் நேற்று தமிழக கர்நாடக எல்லையான பில்லுகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், இன்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 4,800 ஆயிரம் கன அடி நீரும், கபினியில் இருந்து 3,500 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

நேற்று தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இங்கே படிக்கவும்

Web Title:Tamil nadu news today live updates chennai weather political events river cauvery chandrayaan 2 nalini parole karnataka crisis

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X