ABC Juice Recipe tamil: நம்முடைய அன்றாட உணவுப் பழக்கங்களில் ஜூஸ் அல்லது பழச்சாறுகளை சேர்ப்பது மிகவும் நல்லது என்று உணவியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த ஜூஸ்கள் நமது உடலுக்கு எண்ணற்ற பயன்களை அள்ளித்தருகின்றன. இந்த அருமையான பானங்களை நம்முடைய வீடுகளிலேயே நாம் தயார் செய்யலாம்.
அந்த வகையில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், முகச் சுருக்கங்கள் மற்றும் அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிற ஓர் பானத்தை இங்கு பார்க்க உள்ளோம். ABC ஜூஸ் (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) என்று அழைக்கப்படும் இந்த ஜூஸை ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிவற்றைக் கொண்டு எளிதில் செய்து விடலாம்.
இந்த ABC ஜூஸ் செல்களை புத்துயிர் பெற செய்வதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இவை, செரிமான எடை இழப்பு மற்றும் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நன்றாக வேலை செய்கிறது.
எப்போது பருக வேண்டும்?
இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் காலை 11 மணியளவில் சாப்பிடலாம், இது காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட இவற்றை பருகலாம்.
இந்த சாற்றில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிலருக்கு வாய்வு ஏற்படலாம். எனவே வாயுத்தொல்லை இருந்தால் சாறு தயாரிக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். சாற்றை வடிகட்டாமல் குடிப்பது நல்லது. மேலும், இந்த சாற்றில் பீட்ரூட் அதிகமாக சேர்த்துக்கொண்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் ஏற்படும். எனவே, மாற்று நாட்களில் பீட்ரூட்டை சேர்த்து பருகுவது நல்லது.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1 தோல் உரிக்கப்பட்டது
பீட்ரூட் - 1/2
கேரட் - 1 நடுத்தர அளவிலானது
எப்படி தயார் செய்வது?
இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
சாற்றை வடிகட்டாமல் அப்படியே பருகி மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.