Ifdhar recipes In Tamil: இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும். ’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.
இந்த ’நோன்புக் கஞ்சி' நமது உடலின் செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து வாடிப் போய் இருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட அற்புத கஞ்சியை எப்படி எளிதில் தயார் செய்யலாம் இன்று இங்கு பார்க்கலாம்.
நோன்புக் கஞ்சி தயார் செய்யத் தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கேரட் - 1
தக்காளி - 1
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
தேங்காய் பால் - அரை கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நோன்புக் கஞ்சிக்கு சிம்பிள் செய்முறை :
முதலில் கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகுக் பச்சை மிளகாயை நீளமாக வெட்டிக்கொள்ளவும்.
பின்னர், அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ளவும்.
தொடர்ந்து, ஒரு மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு ஒரு 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
இந்த தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது தணலை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இந்த கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான, சத்தான மற்றும் ஆரோக்கியமான நோன்பு கஞ்சி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.