ஐ.பி.எல் 2023 (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக அரங்கேறுகிறது. 10 அணிகள் களமாடும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நிலவிய கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில மைதாங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டள்ளன. அதன்படி, ஒவ்வொரு அணியும் அதன் சொந்த மைதானத்திலும், எதிரணிகளின் மைதானத்திலும் விளையாடும். அந்த வகையில், அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஐ.பி.எல் 2023 தொடரில் களமாடும் 10 அணிகளும் அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குழு – ‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், குழு – ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த அட்டவணையின் படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இதனால், ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.