மிதுனம் ராசி பலன் – இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள்.
அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படலாம். வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், உங்கள் மனதில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது. மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.Read More