கும்பம் ராசி பலன் – கும்ப ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவீர்கள்.